உடல் மெலிந்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகை சுருதிஹாசன் பதிலடி

உடல் மெலிந்ததை விமர்சித்தவர்களுக்கு நடிகை சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்துள்ளார்.

சுருதிஹாசன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது.

தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டார். அதில் உடல் மெலிந்த தோற்றத்தில் ஆளே மாறிப்போய் இருந்தார்.

இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் விமர்சித்தனர். உடல் இளைத்து அழகை கெடுத்து விட்டீர்களே நன்றாக சாப்பிட்டு எடையை கூட்டுங்கள் என்றனர். இன்னும் சிலர் சுருதியின் தோற்றத்தை கேலி செய்தனர்.

“கமல் சார் சுருதி மேடம் சாப்பிடாமல் இருக்கிறார். என்னவென்று கேளுங்கள்” என்றனர். ரசிகர்களின் இந்த கருத்துகளுக்கு சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து கூறியதாவது:-

“குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். என்னை பற்றி மற்றவர்கள் சொல்வதை கவனத்தில் கொள்ள மாட்டேன். இது எனது முகம். எனது வாழ்க்கை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உடல் மாற்றங்கள் என்பது சுலபமான விஷயம் இல்லை. நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதை சொல்வதற்கு வெட்கப்படவில்லை. மனதின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts