ஆர்ப்பாட்டங்கள் என்னை மட்டுப்படுத்துகிறது ஜனாதிபதி

தேசிய கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கும் திறமையான அரச சேவையை முன்னெடுப்பதற்கும் நேரத்தை செலவிட முடியாதவாறு ஆர்ப்பாட்டங்கள் தனது கவனத்தை மட்டுப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்தார்.

பாராளுமன்ற குழுக்கள் முன்வைத்திருக்கும் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த தான் விரும்பினாலும் தனது அலுவலகத்துக்கு முன்னால் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் தனது நேரத்தையும் கவனத்தையும் மட்டுப்படுத்துவதால் அந்த அறிக்கைகளை ஆராயமுடியாமல் இருப்பதாகவும் கூறினார்.

மிகச்சிறந்த செயற்பாட்டை அடைந்துள்ள அரசாங்க நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக அரசாங்க கணக்கியல் குழுவின் ஏற்பாட்டில் (கோபா) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றுகையில்,

பல்வேறு அமைச்சுகளுக்கூடாக வரும் பிரச்சினைகளுக்கு அமைச்சு மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும். சுமார் 1.5 மில்லியன் அரசாங்க உத்தியோகத்தர்கள் எம்மிடம் உள்ளனர். இதற்கு மேலதிகமாகவும் பலர் அரசாங்க சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதனால் அரசாங்கத் துறையிலுள்ள சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அரசாங்க வருமானத்தை அதிகரித்தால் மட்டுமே இத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். இதற்காக நாம் ஊழல் மற்றும் வீணான செலவுகளை தவிர்த்து புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தால் மட்டுமே இவற்றுக்கு முகம்கொடுக்கலாம். இல்லாவிடில் இந்த ஒட்டுமொத்த முறையும் கவிழ்ந்துவிடும்.

மக்களுக்கு சிறப்பான சேவையை பெற்றுக்கொடுப்பதற்காகவே இப் பொறிமுறைகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுமாறு நான் அரசாங்க உத்தியோகத்தர்களை கேட்டுக்கொள்கின்றேன். சேவைகள் தாமதமாவது, நேரம் வீணாவது, நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியது, ஒரு வேலையை நிறைவேற்றுவதற்காக பல இடங்களுக்குச் சென்று வர வேண்டியது ஆகியனவே பொதுவான முறைப்பாடுகளாக உள்ளன.

இக் குறைபாடுகளை தீர்க்க வேண்டியது அவசியம்.

ஒரு முதலீட்டாளர் அனுமதிக்காக மூன்று வருடங்களுக்கு காத்திருக்க வேண்டி ஏற்பட்டால் அவரும் இதே யோசனையை தான் முன்வைப்பார். அத்துடன் அதிகாரிகளை கவனமாக கையாளுங்கள். தற்போது குழுக்களின் சந்திப்புக்கள் ஊடகங்களில் காண்பிக்கப்படுகின்றன. அண்மையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விசாரணையை நான் பார்த்தேன்.

மிகவும் திறமையான மற்றும் அறிவான நபர்களை நாம் இக் குழுக்களின் தலைவராகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் நியமித்துள்ளோம். இவர்களுக்கு இதற்காக எவ்வித சம்பளமோ அல்லது சிறப்புரிமைகளோ வழங்கப்படுவதில்லை. நான் அதனை தொலைக்காட்சியில் பார்த்த பின்னர், புதிய தலைவருக்கு நான் தனிப்பட்ட முறையில் தொலைபேசி அழைப்பு செய்து ‘கோப்’ விசாரணையில் அவர் நடத்தப்பட்ட முறைக்காக அவரை ஏமாற்றம் கொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொண்டேன் என்றார்.

Related posts