மாதவிடாய் நேரத்தில் உணவு சமைத்தால் மறுபிறவியில் நாயாக பிறப்பர்

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தங்கள் கணவருக்கு உணவு சமைத்தால் மறுபிறவியில் அவர்கள் நாயாகவும், அந்த உணவை உண்ணும் கணவர், காளை மாடாகவும் பிறப்பார்கள் என்று குஜராத்தில் மதகுரு ஒருவர் பேசியுள்ளார்.

இந்த கருத்தைச் சுவாமி குருனாஸ்வரூப் தாஸ்ஜி என்ற மதகுரு பேசியுள்ளார். சுவாமிநாராயன் கோயிலின் முக்கிய பதவியில் குருஸ்னஸ்வரூப் இருந்துவருகிறார்.

சமீபத்தில் கல்லூரி மாணவிகள் 68 பேரின் உள்ளாடையைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்தி கைதான கல்லூரி முதல்வர் , அலுவலர்கள் பணியாற்றிய கல்லூரியும் சுவாமி நாராயணன் கோயிலில் இயங்கி வருகிறது.

குஜராத்தில் கட்ச் மாவட்டத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீசகஜானந்த் பெண்கள் இன்ஸ்டிடியூட்(எஸ்எஸ்ஜிஐ) இயங்கி வருகிறது. சுவாமி நாராயணன் கோயில் டிரஸ்ட் மூலம் இந்த கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எழுதப்படாத விதி ஒன்று அமலில் உள்ளது. அதாவது இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள், தங்களது மாதவிடாய் காலத்தில் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்பதும், பழகுவதும் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விதியை சில மாணவிகள் மீறியதாக கூறப்படுகிறது. மாணவிகள் சிலர் இந்த கட்டுப்பாட்டை மீறிய தகவல் விடுதி காப்பாளருக்குத் தெரியவந்ததை அடுத்து அவர், கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில், கல்லூரி முதல்வர் தலைமையில், விடுதியில் இருந்த 68 மாணவிகளையும் கழிவறைக்கு வரிசையாக அழைத்துச் சென்று அவர்களது உள்ளாடைகளைக் களையச் செய்து சோதனை நடத்தி உள்ளனர்.
இந்த செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் உருவாக்கியது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு உள்ளிட்ட நெருக்கடி காரணமாகக் கல்லூரி முதல்வர் ரீட்டா ரணிங்கா , கல்லூரி நிர்வாகி ரமீலா பென், புயூன் நைனா உள்பட 3 பேர் கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டனர்

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர்,அலுவலக உதவியாளர் ஆகியோரையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்த சூழலில் சுவாமி குருஸ்னஸ்வரூப் தாஸ்ஜி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ எங்கு எப்போது பேசியது எனத் தெரியவில்லை. ஆனால், கோயிலின் யூடியூப் சேனலில் அந்தவீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் வில் அவர் பேசுகையில், ” மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைக்கும் உணவை உண்ணும் கணவர் அடுத்த பிறவியில் காளை மாடாகவும், அந்த மாதவிடாய் நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்கும் பெண்கள் அடுத்த பிறவியில் பெண் நாயாகவும் பிறப்பார்கள்.

என்னுடைய கருத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. இவை அனைத்தும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆதலால் கணவன்மார்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கவனக்குறைவாக இருந்து உணவு சமைத்தால் அது பாவமாகும்.ஆதலால், ஆண்கள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும்.அது உங்களுக்கு உதவும்” எனத் தெரிவித்துள்ளார்

Related posts