விஜய் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது: ஹெச்.ராஜா

விஜய் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

வருமான வரி சோதனை நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜய். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய் – ஆண்ட்ரியா – விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தவே, விஜய் ரசிகர்களும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாஜகவினர் நடத்திய போராட்டத்துக்கு பெப்சி அமைப்பு தொடங்கி, பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. பாஜக போராட்டத்துக்குப் பிறகும் தொடர்ச்சியாக நெய்வேலியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதனிடையே பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஜினி, விஜய், வருமான வரித்துறை சோதனை, திமுக, முரசொலி நிலம், சீமான் எனப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

இதில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை மற்றும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பாஜகவின் போராட்டம் நடத்தியது தொடர்பான கேள்விக்கு ஹெச்.ராஜா பதில் கூறியிருப்பதாவது:

”விஜய்க்கு எதிராக பாஜக எங்கு போராடியுள்ளது? சில ஆண்டுகளுக்கு முன்பு சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்தது. அப்போது விபத்து ஏற்பட்டது. ஆகையால், அங்கு நடந்த படப்பிடிப்புக்கு எதிராகவே போராட்டம் நடைபெற்றது.

விஜய்க்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை. தயவு செய்து திரித்துப் போடாதீர்கள். விஜய் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. ‘அரவிந்தன்’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதால், மீண்டும் ஒரு விபத்து ஏற்பட வேண்டாம் என்று போராட்டம் நடத்தினார்கள். இது நியாயம்தானே.

சினிமா உலகில் கருப்புப் பணம் இருப்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆகவே, உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் ரெய்டுகள் நடக்கலாம். வருமான வரித்துறை சோதனை முடிந்தவுடனே, முடிவு என்ன என்ற கேள்வி கேட்பது வருமான வரித்துறைச் சட்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். பணம் பிடிக்கப்பட்ட அனைவருக்குமே நோட்டீஸ் போயிருக்கிறது. அரசு நிர்பந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. அனைத்துமே சட்டப்படி நடக்கும்’ இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Related posts