ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன்?

தர்பார் படத்துக்கு பிறகு சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இது அவருக்கு 168–வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சத்தில் தயாராகிறது. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தது. ரஜினிகாந்த், குஷ்பு, மீனா ஆகியோர் இணைந்து நடித்த காட்சிகளும் ரஜினியின் அறிமுக பாடல் காட்சியும் படமாக்கப்பட்டன. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இதில் சித்தார்த்தும் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனும் ரஜினி படத்தில் இணைந்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் அந்த தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. போலியான டுவிட்டர் கணக்கில்தான் அந்த விவரம் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதை விடவில்லை.

ரஜினி படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரென்டிங் செய்து வருகிறார்கள். டெலிவி‌ஷனில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகர். படத்திலும் ரஜினி ரசிகராக நடித்துள்ளார். ரஜினி படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் உடனே சம்மதித்து விடுவேன் என்று பல மேடைகளில் கூறி வந்தார்.

Related posts