தமிழகத்திற்கு நல்லாட்சி விருது..? அடிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜா மற்றும் ஹெலன் சத்யா அவர்களின் திருமணம் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முன் அனுமதி பெறாமலே அவரை சந்திக்கும் நபர்களில் விக்கிரமராஜாவும் ஒருவராக இருந்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதனை எதிர்க்கின்றன. அதிமுகவும் 12 வாக்குகள் அளித்துள்ளது. இவர்கள் சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மவுனமாக உள்ளது. மாநில உரிமை பறிபோவதை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை.

அதிமுக நடத்துவது கமிஷன் ஆட்சி. தற்போது இருக்கக் கூடிய ஆட்சி வியாபார ஆட்சி. தமிழகத்துக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும்.

மணமக்கள் மத்திய – மாநில அரசுகள்போல் அமைதியாக இருக்காமல் கேள்விகள் கேட்க வேண்டும்.

சுயமரியாதை இயக்கம் கண்டு பெண்களுக்கான சம உரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார், இன்று அவரையே விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு, திமுக உடனான நட்பும் தோழமையும் தொடர வேண்டும் என வேண்டிக் கொள்வதாக கூறினார்.

Related posts