வெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா?

வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தற்போது ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 38-வது படம். கதாநாயகியாக அபர்ணா முரளி வருகிறார். இறுதி சுற்று படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சூர்யா நடிப்பு பிரமாதமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். விமான நிறுவனம் தொடங்க ஆசைப்படும் சூர்யாவும் அதற்காக அவர் படும் கஷ்டங்களும் டிரெய்லரில் இடம்பெற்று உள்ளன.

படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது தற்போது உறுதியாகி உள்ளது.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து காளைகளை அடக்கும் காட்சிகளும் அதற்கு பின்னால் உள்ள அரசியலும் படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு வாடிவாசல் என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து வெற்றிமாறன் கூறும்போது, “வாடிவாசல் என்ற கதை உரிமையை வாங்கி வந்துள்ளேன். அதை வைத்து படம் எடுப்பேன்” என்றார்.

இது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Related posts