‘தர்பார்’ குறித்து தவறான பதிவுகள்சுசீந்திரன் கண்டனம்

சமூகவலைதளத்தில் ‘தர்பார்’ குறித்து தவறான பதிவுகள் வெளியிட்டு வருவதற்கு இயக்குநர் சுசீந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியானது. இதில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், மக்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்துக்கு இணையத்தில் பலரும் வேண்டுமென்றே தவறான கருத்துகளைப் பதிவிட்டு வருவதைக் கண்டித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’தர்பார்’ படம் குறித்து சிலபேர் வேண்டுமென்றே தவறான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏ.ஆர்.முருகதாஸ் சாரும், ரஜினி சாரும் சேர்ந்து இந்த பொங்கல் திருவிழாவிற்கு சிறப்பான பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி சாரின் எனர்ஜியை பார்த்துவிட்டேன். நான் தந்த டிக்கெட் பணத்திற்கு முதல்பாதி பார்த்தவுடன் முழு திருப்தி அடைந்துவிட்டேன்.

கோமாளி’ படத்துக்குப் பிறகு யோகிபாபு ரஜினி சாருடன் இணைந்து கொண்டாட்டமான படத்தைத் தந்துள்ளார். ரஜினி சாருடைய மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ் எதார்த்தமான க்யூட்டான நடிப்பு. எமோஷனல் காட்சியில் சூப்பர் நடிப்பு. அனைவருமே குடும்பத்தினருடன் தியேட்டர் சென்று பாருங்கள். மிகவும் சுவாரசியமான திரைப்படத்தை ’தர்பார்’ குழுவினர் தந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

Related posts