05.01.2020 இன்றைய முக்கிய தமிழ் சினிமா செய்திகள் காலை

டைரக்டர் சீனுராமசாமியின் 2 படங்களும் ரிலீஸ் ஆகாதது ஏன்?

தமிழ் சினிமாவில், கிராமத்து கதைகளை உணர்வுப்பூர்வமாக சொல்லும் டைரக்டர்கள் பட்டியலில், புதுசாக இடம் பிடித்து இருப்பவர், சீனுராமசாமி. இவர் இயக்கிய `தென்மேற்கு பருவக்காற்று’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

சில பிரச்சினைகள் காரணமாக இவருடைய டைரக்‌ஷனில் உருவான `இடம் பொருள் ஏவல்,’ `மாமனிதன்’ ஆகிய 2 படங்களும் `ரிலீஸ்’ ஆகாமல், வருடக்கணக்கில் முடங்கி கிடக்கின்றன. 2 படங்களிலும் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். `இடம் பொருள் ஏவல்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். `மாமனிதன்’ படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். 2 படங்களும் `ரிலீஸ்’ ஆகாதது பற்றி ஒரு ரசிகர் டுவிட்டரில் தனது வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார். “தமிழ் சினிமா மரணத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறதா?” என்று அவர் கேட்டிருந்தார்.

அவருக்கு சீனுராமசாமி பதில் அளிக்கும் வகையில், “இந்த புத்தாண்டில் நன்மை பிறக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்!

—–

வெற்றிமாறனுடன், சூர்யா!

சூர்யா படங்களில் நடிப்பதுடன், சொந்த பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பு-தயாரிப்பு ஆகிய 2 பணிகளையும் செய்து வருகிறார். அடுத்து சூர்யா, டைரக்டர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

காவல்துறைக்கு 50 சி.சி.டி.வி. கேமராக்களை சூர்யாவின் 2டி நிறுவனம் வாங்கி கொடுத்துள்ளது. “இதுபோன்ற சமூக பணிகளை 2டி நிறுவனம் அடிக்கடி செய்யும்” என்று இந்த நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் கூறினார்!

——

சூர்யா தயாரிப்பில் கார்த்தியின் புதிய படம் !

கார்த்தி நடித்து வெற்றி பெற்ற `கடைக்குட்டி சிங்கம்’ படத்தை அவருடைய அண்ணன் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்தது.

அந்த படம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன.

கார்த்தி நடிப்பில் `கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா, புதிய படத்தை இயக்குவார் என்று பேசப்படுகிறது!

——–

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய், 4-வது முறையாக இணைவார்களா?

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய மூன்று படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள்.

விஜய் இப்போது அவருடைய 64-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடித்துள்ள `தர்பார்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று பேச்சு அடிபடுகிறது. `துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கலாமா? என்று ஏ.ஆர்.முருகதாஸ் யோசித்து வருகிறார். `துப்பாக்கி’ படத்தின் கதை மும்பையில் நடப்பது போல் இருக்கும். அதே கதைக்களத்தை புதிய படத்துக்கும் வைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு ஒரு கதைக்களத்தை பயன்படுத்தலாமா? என்று உதவி டைரக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார், ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மீண்டும் இணைந்தால், அது இருவருக்கும் நான்காவது படமாக அமையும்!

Related posts