நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்திபன் படத்தில் வடிவேலு?

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை தயாரிப்பாளர் சங்கத்தின் தடையால் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகின்றனர். இதனால் 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் உள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் கசிந்தது.

இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல் பங்கேற்று வருவதால் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. வெப் தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் வருகின்றன. அவரும் வெப் தொடரில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பார்த்திபன் நடித்து இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி கொடி கட்டு படத்தில் இவர்களின் காமெடி பேசப்பட்டது.

சமீபத்தில் பார்த்திபனும் வடிவேலும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது இருவரும் இணைந்து நடிப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

வடிவேலுவை சந்தித்த புகைப்படத்தை பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டு இந்த சந்திப்பு நாளை செய்தியாகலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் மறக்க முடியுமா? உங்கள் காமெடியை, நாளைய வெள்ளித்திரையில் உங்கள் இருவரின் நகைச்சுவையை காண ஆர்வமாக காத்திருக்கிறோம் என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.

Related posts