‘ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

தமிழ் படங்கள் போட்டி பிரிவில் 13 படங்கள் பங்கேற்றன. திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது.

சில்லுக்கருப்பட்டி, பக்ரீத் படங்களுக்கு 2-வது இடத்துக்கான விருதுகள் கிடைத்தன. அசுரன் படத்தை இயக்கிய டைரக்டர் வெற்றி மாறன் சிறப்பு விருதை பெற்றார். விழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது:-

“ஒத்த செருப்பு படத்துக்கு விருது வாங்கியது ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கார் விருது வாங்கும்போது கிடைத்த சந்தோஷத்தை தருகிறது. அதுவும் இந்த விருதை நமது தமிழ் மண்ணில் வாங்குவது கூடுதல் மகிழ்ச்சி. ஆஸ்கர் விருதுக்கு மத்திய அரசு ‘காப்பி’ படங்களை அனுப்புவதை தவிர்த்து விட்டு சிறந்த படங்களை அனுப்ப வேண்டும்.

சிறிய படங்களை குறைவாக மதிப்பிடக் கூடாது. பெரிய படங்கள் வரும்போது சிறிய படங்களை திரையரங்குகளில் இருந்து எடுத்து விடுவது ஏற்புடையது அல்ல. குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. மாணவர்களின் குரலை நசுக்கக் கூடாது. பிரிவினை இல்லாத இந்தியா, வன்முறை இல்லாத இதயம் இப்போது முக்கியம்.”

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

Related posts