சுஜித் மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது. பொது மக்கள் அஞ்சலிக்கு பின்னர், சுஜித் உடல், பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில் சுஜித் உயிரிழந்தது தமிழகத்தை சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது.

இந்நிலையில் சுஜித் மறைவிற்கு ராகுல் காந்தி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், திமுக எம்.பி., கனிமொழி, தெலுங்கானா ஆளுநா் தமிழிசை சவுந்தர ராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ராகுல்காந்தி: குழந்தை சுஜித் உயிரிழந்த செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தியில், கடுமையான போராட்டங்கள் நடத்தியும் குழந்தை சுஜித்தை மீட்க முடியாதது மனவேதனை அளிக்கிறது எனக்கூறியுள்ளார்.

அமைச்சர் வேலுமணி வெளியிட்ட அறிக்கையில், ஈடு செய்ய இயலாத குழந்தை சுஜித் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இரவு பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.

சிறுவன் சுஜித்தின் அழுகுரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாக நினைத்த சுஜித்தின் அழுகுரல், இன்னும் தன்னுள் ஒலிக்கிறது என்றும்…. தன் மனம் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் உணவு, உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம் என்றும், இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை என்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம்… கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை என உருக்கமாக அவர் பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச சிகிச்சை வழங்க நினைத்து காத்திருந்த தமக்கு, பிணவறையில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக் கிடப்பதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

85 அடி ஆழத்தில் கேட்ட மூச்சுச் சப்தம் தான் மீட்பு பணியில், ஒரு தந்தை ஸ்தானத்தில் பாசப் பிணைப்பில் இணைத்து இயங்க வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனதை தேற்றி கொள்கிறேன்…. ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை என, மீட்புப் பணி களத்தில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதில் கூறியிருப்பதாவது:-

நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்! ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! இவ்வாறு அந்த பதிவில் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக எம்.பி.,கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

சுஜித்தின் இழப்பு ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வி. எப்படியாவது அவன் காப்பாற்ற படுவான், காப்பாற்ற படவேண்டும் என்று துடித்த லட்சக்கணக்கான இதயங்கள் இன்று மீளா துயரில். அச்சிறுவனை இழந்து வாடும் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதல். கடந்த நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி என அதில் பதிவிட்டுள்ளார்.

பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் வெளியிட்டஅறிக்கையில்,

82 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை;குழந்தை இறந்து விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரை அனைவரும் கடுமையாக போராடினார்கள். பல்வேறு தரப்பும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது பெரும் சோகம் தான்.இயற்கையும் சதி செய்தது. இயற்கையை வெல்ல முடியாதது வேதனையளிக்கிறது.

சுஜித்தை மீட்பதில் உள்ள சிக்கல்களையும், இடர்பாடுகளையும் அனைவரும் அறிவார்கள். அவற்றையும் கடந்து அதிசயம் ஏதேனும் நிகழும்; அச்சிறுவன் உயிருடன் மீண்டு வருவான் என நம்பினோம். அது நடக்காதது சிறுவனின் குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரிழப்பு தான்.

சுஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை குறை கூற முடியாது. ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாதது சோகமே. இனியும் இப்படி ஒரு சோகம் நிகழாத அளவுக்கு இத்தகைய சூழல்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களும்,கருவிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

எப்படியாவது நலமுடன் வந்துவிடுவான் என்று அனைவரும் எதிர்பார்த்த குழந்தை சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குகிறது.
குழந்தையை இழந்திருக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளால் முடியாது. ஆழ்துளை குழிகளில் நிகழும் உயிரிழப்பில் இதுவே கடைசியாக இருக்கட்டும். தன் உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத் தந்திருக்கிற பாடத்தை அனைத்துத் தரப்பினரும் இனியாவது கடைபிடிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

குழந்தை சுஜித் இறந்த நிலையில் மீட்ட செய்தியறிந்து மிகுந்த துயரமுற்றேன்.எப்படியாவது மீட்கப்பட்டு விடுவான் என்று நம்பினேன்,இறைவனை வேண்டினேன்.

உலகமே சுஜித்தை மீட்க பிரார்த்தனை செய்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இத்தகைய துயரச்செய்தி நம் அனைவருக்குமே அதிர்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Related posts