கூட்டமைப்பு செய்தவைகளை கூட எமது அமைச்சர்கள் செய்யவில்லை

அரசாங்கத்தில் பதவிகள் வகித்தும் பங்காளிகளாக இருந்தும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்கின்ற பழைய பிரச்சினைகளுக்கும் புதிய நெருக்கடிகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை நீடிப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுத்தும் ஆதரவளித்தும் செயலாற்றுவது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளும் முஸ்லிம் சமூகமும் சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்து தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளில் ஒரு பங்கைக்கூட ஆளுங்கட்சி அமைச்சர்களாக பதவி வகித்து சமூகத்திற்கு ஆற்றியதாகத் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, ‘நெருக்கடிகள் அதிகரித்து கொண்டு செல்கின்ற அதேநேரம், இருந்துவரும் பிரச்சினைகளும் தீர்க்கப்படாது தொடர்ந்து கொண்டிருப்பதும் கவலை தரும் விடயங்களாக உள்ளன.

இலங்கை உள் விவகாரங்களில் முஸ்லிம் விரோத நாடுகளின் தலையீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

குறிப்பாக 21/4 தாக்குதல் தொடர்பிலான புலனாய்வு நடவடிக்கைகளில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகள் நேரடியாக ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. ஆனால் இந்த நாடுகள் தலையீடு செய்த எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான பிரச்சினைகள் தீர்ந்ததாக இல்லை. மாறாக அந்நாடுகளில் பிரச்சினைகள் அதிகரித்து பூதாகாரப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் தலையீடு செய்த நாடுகள் பெரும் பாரிய அழிவுகளுக்கும் சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளன. அந்நாடுகளின் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பெரும்பகுதியினர் கடல்கடந்து ஒடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களில் எண்ணற்றோர் இடம்பெயர்ந்த படகுகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இவை சரித்திரமல்ல துக்ககரமான பயங்கர சமகால நிகழ்வுகள்.

இங்கு இடம்பெறும் விசாரணைகளில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகரிப்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. 21/04 தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்ற அரசாங்கத்தின் உயர் மட்ட அறிவிப்பைத் தொடர்ந்து திருப்தியடைந்த முஸ்லிம்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நாளுக்கு நாள் முஸ்லிம்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை சமூகம் அச்சத்துடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றது.

உதாரணமாக ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்யப்பட்டுள்ளமை முஸ்லிம்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்த்தவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர். அப்படியிருக்ககையில் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூலமோ அரசாங்கத்தின் மூலமோ இதுவரையும் எந்தவொரு காரணமும் முன்வைக்கப்படவில்லை.

இது போன்ற கைதுகளின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் செயற்படுகின்றன எனப் பரவலாக நம்பப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இந்நாட்டில் பல மடங்கு தீவிரப்படுத்தப்படலாம் என்ற வதந்திகளும் முஸ்லிம்கள் மத்தியில் பரவிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் பதவிகளை அண்மையில் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளும் நெருக்கடிகளும் தீர்க்கப்பட்டதாகவோ குறைந்ததாகவோ இல்லை. முஸ்லிம் அரசியலும் சமய, சமூக அமைப்புக்களும் பெரிதும் பாதிப்படையலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இயக்க ரீதியாக இயங்குவதும் பிரச்சினையாகும் நிலைமை உருவாகும் என்ற அச்சமும் நிலவுகின்றது.

வெளிநாட்டு முஸ்லிம் விரோத சக்திகள், எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி இங்கு செயற்பட அரசாங்கம் இடமளித்திருப்பது இவற்றுக்கு முக்கிய காரணமாக அமையும். இது கவலைக்குரிய நிலைமையாகும். கண்களுக்கு தென்படாத இரும்பு சங்கிலிகளைக் கொண்டு முஸ்லிம்களை சுற்றி வளைப்பதில் சர்வதேச இஸ்லாமிய விரோத சக்திகள் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. இவற்றை அரசிலிருந்து கொண்டு தீர்க்க முடியாத நிலைமையை முஸ்லிம் சமூகத்தினால் காணமுடிகின்றது.

தற்போது முக்கிய தேர்தலொன்றை முன்னோக்கி இருக்கும் நிலையில் சகல கட்சிகளுடனும் சுதந்திரமாகப் பேசி முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி கொள்வது மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் தீர்வுகள் இவற்றில் முக்கியத்துவம் பெறுவது அவசியம். அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. மத்ரஸா கல்வி, வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் தாமதம் என்றபடி பலவித பிரச்சினைகளுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுத்த வண்ணமுள்ளனர். தமிழ் சமூகத்தினர் முன்னர் முகம் கொடுத்த பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து பெருமளவு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முன்பு தமிழ் சமூகத்தினர் முகம் கொடுத்தது போன்ற பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு முஸ்லிம் சமூகம் தற்போது முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் அரசியல் தலைமைகளின் பின்னால் இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகள் மிகவும் ஆதரவாகவும் விழிப்பாகவும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதே சக்திகள் உலகளாவிய ரீதியாக முஸ்லிம்களை எதிரிகளாக நோக்குகின்றன. இங்கும் எதுவித தங்குதடையுமின்றி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் எதுவுமே அறியாத பாலகர்கள் போன்று இருக்கின்றோம். தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ள போதிலும் அச்சமூகத்திற்காக பாரியளவு சேவைகளை த. தே. கூ பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை அக்கட்சி எவ்வாறு செய்கின்றது என்பது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களும் ஒரு தரம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இலங்கையில் நடைமுறையில் இருப்பது விகிதாசாரத் தேர்தலாகும். இத்தேர்தல் முறைமைப்படி எந்தவொரு கட்சியும் பாராளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையைப் பெறுவது கஷ்டமான காரியமாகும். அதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும், நம்பிக்கையில்லாப் பிரேரணை, சட்ட மூலங்கள், பிரேரணைகள், விவாதங்களை நிறைவேற்றுவதற்கும் ஆளும் கட்சிக்கு மேலதிகமாக ஏனைய எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது.

அந்த அடிப்படையில் தான் த. தே. கூட்டமைப்பு அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், ஒவ்வொரு வாக்கெடுப்பின் போதும் தம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பேரம்பேசுதல்களை மேற்கொண்டு ஆளும் தரப்புக்கு ஆதரவாக வாக்களித்து தம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றி வைக்கின்றது. ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொண்டதும் அதற்கு மேலதிகமாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வையையும் அரசாங்கம் செய்யாத நிலையே நீடிக்கின்றது. தேர்தல் முன்னோக்கி உள்ளதால் பிரதேச மட்டத்தில் ஏதோ உதவிகளை செய்யும் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதைக் காணுகின்றோம். ஆனால் முஸ்லிம்களின் தேசிய மட்டத்திலான சமூகம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் அமைச்சு பதவிகளைக் கொண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அப்பதவிகளால் சமூகத்திற்கு எந்த நன்மையுமே கிடைக்கப்போவதில்லை.

Related posts