விஞ்ஞானிகள் அதிகமாக கவலைப்பட வேண்டாம்..

சந்திரயான் -2 விண்கலம் செலுத்தப்பட்டதன் நோக்கம் 95 சதவீதம் நிறைவேறியுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான மாதவன் நாயர் கூறியுள்ளார்.

சந்திரயான் – 2′ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

சந்திரயான் – 2 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, ‘இஸ்ரோ’ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூரு வந்தார்.

அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ – மாணவியரும் பெங்களூரு வந்தனர். சந்திரயான் – 2′ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், இன்று அதிகாலை, 2:15 மணி அளவில், தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார்.

இதுகுறித்து மாதவன் நாயர் கூறியதாவது:

விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் தருவாயில் சிக்னல் துண்டிக்கப்பட்டது வருத்தமான விஷயம் தான். நாடுமுழுவதுமே இந்த வெற்றியை எதிர்பார்த்து காத்து இருந்தது. விஞ்ஞானிகளின் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது.

சந்திரயான் ஏவப்பட்ட நடவடிக்கையை நாம் கூர்ந்து கவனித்தால் இது நமக்கு புரிய வரும். இறுதியாக 2.1 கிலோ மீட்டர் பயணத் தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது.

ஆனால் இது மிகவும் சிக்கலானது. இதற்காக பலரும் பல மணிநேரம் தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள். சிறிது நேரம் கடந்து இருந்தால் முழு வெற்றியை அடைந்திருக்க கூடிய தருவாயில் இப்படி நடந்துள்ளது.

இதற்கான முழுமையான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதனை தெரிவிப்பர். எனினும் சந்திரயான்- 2 திட்டத்தில் 95 சதவீதத்துக்கும் மேல் வெற்றி கிடைத்துள்ளது.

எனவே இதை பற்றி விஞ்ஞானிகள் அதிகமாக கவலைப்பட வேண்டாம். விண்கலம் தற்போதும் விண்வெளியில் தான் உள்ளது. அது திறன்பட தனது பணியை செய்து வருகிறது.

இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.

Related posts