ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏழை மக்களின் நலனுக்காக

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில் தீபா மற்றும் தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் புகழேந்தி, ஜனார்த்தனன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த 27 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையின் போது ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் ஆகஸ்டு 30-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து தீபா, தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு சட்டப்பூர்வமான வாரிசுகள் தாங்கள் தான் என்றும் சொதுக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீபா தரப்பில் கூறப்பட்டது. மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றக்கூடாது எனவும் தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏழை மக்களின் நலனுக்காக செலவு செய்யலாமே என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். ஏழை மக்களின் நலனுக்காக ஜெயலலிதா சொத்துகளின் சில பகுதிகளை பயன்படுத்துவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தீபா பதிலளித்தார். மேலும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தான் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என தீபா கூறினார்.

இதனையடுத்து ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் தீபாவை அனுமதிக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார். அதன் பின்னர் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய இந்த வழக்கு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related posts