சம்பளம் தராமல் ஏமாற்றுகின்றனர் தயாரிப்பாளர்கள்

அசுரன் போன்ற ஒரு படத்தில் நடிக்க 36 வயதில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும்.

தனுஷ்-மஞ்சுவாரியர் நடித்துள்ள படம் அசுரன். வெற்றி மாறன் இயக்கி உள்ளார். எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தனுஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-

“அசுரன் போன்ற ஒரு படத்தில் நடிக்க 36 வயதில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். மஞ்சுவாரியர் திறமையான நடிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இதில் நிறைவேறி உள்ளது. வடசென்னையை விட அசுரன்தான் வெற்றிமாறனின் சிறந்த படமாக இருக்கும்.

வட சென்னை படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். நான் விருது கிடைத்ததும் குதித்தது கிடையாது. கிடைக்கவில்லை என்று துடித்ததும் கிடையாது. இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அது பெரிய வேலையாக இருக்கிறது.

பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தாணு முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டார். எனவே என்றைக்குமே அவருக்கு நன்றியோடு இருப்பேன். படம் திரைக்கு வந்து பல அதிசயங்களை செய்யும்.” இவ்வாறு தனுஷ் பேசினார்.

மஞ்சுவாரியர் பேசும்போது, “தனுசின் ரசிகை நான். அவருடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

Related posts