இந்து சமுத்திர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கூடுதல் கவனம்

கடல்வழி வர்த்தகம், சக்தி வளம். அகழ்வு மற்றும் இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்தார்.

பிராந்தியத்தின் அமைதி, சமாதானம் மற்றும் ஸ்தீரதன்மைக்கு மதங்களை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதக் குழுக்களின் செயற்பாடுகள் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, உலகளாவிய ரீதியிலும் பிராந்திய மட்டத்திலும் அமைதி, சமாதானம், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தனித்தனியாக செயற்படுவதைவிட ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இலக்கை அடைய முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இராணுவம் வருடாந்தம் நடத்திவரும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. “சமகால பாதுகாப்பு சூழலில் மாறிவரும் இராணுவத்தின் சிறப்பியல்பு” என்ற தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றுவரும் இம் மாநாட்டின் தொடக்க நாள் அங்குரார்ப்பண நிகழ்வில் ஆரம்ப உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

உலகளாவிய ரீதியில் அமைதி, சமாதானம், ஸ்தீரத்தன்மையை எற்படுத்துவது தொடர்பில் ஆராய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இது போன்ற மாநாடு நன்மையை தருகின்றது. இந்து சமுத்திரமானது கடல் வழி வியாபாரத்திற்கு கேந்திர நிலையமாக காணப்படுகின்றது. கிழக்கு முதல் மேற்கு வரை இக் கடல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் இப் பிராந்தியத்தில் இராணுவ பலம் அதிகரிக்க பாரிய தேவை காணப்படுகின்றது. இந்த பிராந்தியத்திலுள்ள இராணுவம் சகல சவால்களுக்கும் முகம்கொடுக்கும் வகையில் மேலும் நவீனமயப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது என்றார்.

ஸாதிக் ஷிஹான்

Related posts