அடிபட்ட கன்று ; பாசப் போராட்டம் நடத்திய தாய்..!

முச்சக்கர வண்டி மோதியதில் அடிபட்டு உயிருக்கு போராடிய தனது கன்றுக் குட்டியைப் பார்த்து பதறிய தாய்ப் பசு, கன்றை நாக்கினால் தடவி பாசப் போராட்டம் நடத்தியக் காட்சி கண்டோரின் கண்களில் நீரை வரவழைத்தது.

தமிழகத்தின் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு ஒரு முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்தது. காஜாமலை காலனி அருகே அந்த முச்சக்கர வண்டி சென்றபோது, ஓடிவந்த கன்றுக் குட்டி அதன் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், முச்சக்கர சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

முச்சக்கர வண்டி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கன்றுக் குட்டி, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து முச்சக்கர வண்டியை தூக்கி நிறுத்திவிட்டு கன்றுக் குட்டியை மீட்க முயற்சி செய்தனர்.

அதற்குள் அங்கு சில பசுக்களுடன் ஓடிவந்த கன்றின் தாய், அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை நாவால் தடவிக் கொடுத்தபடியே சுற்றி நின்றவர்களைப் பார்த்து பெருங்குரலில் கத்தியது. அந்த கத்தலில், ‘என் பிள்ளையை யாராவது காப்பாற்றுங்களேன்…’ என்ற கெஞ்சல் தெரிந்தது.

இதையடுத்து, காயமடைந்த கன்றுக் குட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பொதுமக்கள், மேல் சிகிச்சைக்காக அருகில் இருந்த கால்நடை வைத்தியசாலைக்கு கன்றுக் குட்டியை அனுப்பிவைத்தனர்.

அதன் பின்னரே தாய்ப் பசு சற்று அமைதி அடைந்தது. இந்தக் காட்சி, அங்கிருந்தவர்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

Related posts