நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து? பட உலகில் பரபரப்பு

நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்தாகி விட்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அனிஷா நீக்கி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு தலைவரானார். விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டாவுடன் பெல்லி சூப்லு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். விஷால்- அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடந்தது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர். நடிகர் சங்க கட்டிடத்தில் தனது திருமணம் நடக்கும் என்று விஷால் கூறிவந்தார். இந்த நிலையில் விஷால்-அனிஷா திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதாக தெலுங்கு இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமண நிச்சயதார்த்த படங்களை அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்து இருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென்று நீக்கிவிட்டார். அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதை வைத்து திருமணம் நின்று போனதாக தகவல்கள் பரவி உள்ளன.

இதுகுறித்து விளக்கம் கேட்க விஷாலை தொடர்பு கொண்டபோது அவரது போன் ‘சுவிட்ச் ஆப்’பில் இருந்தது. விஷால் குடும்பத்தினரும் இதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. விஷாலுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “திருமணம் நின்று போனதாக வெளியான தகவல் உண்மையானதாக இருக்காது என்றே நம்புகிறோம். சமீபத்தில் கூட இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்” என்றனர்.

Related posts