ஒரு வருட காலத்திற்குள் 7 முக்கிய தலைவர்களை இழந்த பாஜக !

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 66-வயதான அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாஜக கடந்த ஒரு வருடத்தில் அருண் ஜெட்லி உட்பட அதன் ஏழு முக்கிய தலைவர்களை இழந்துள்ளது. அவர்களில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் ஆகியோர் அடங்குவர்.

பால்ராம்ஜி தாஸ் டாண்டன்

சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் டாண்டன், 14 ஆகஸ்ட் 2018 அன்று காலமானார். அவருக்கு 90 வயது.

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த வாஜ்பாய், ஆகஸ்ட் 16, 2018 அன்று காலமானார்.

மதன் லால் குரானா

டெல்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானா அக்டோபர் 27, 2018 அன்று காலமானார். 1993 முதல் 1996 வரை டெல்லி முதல்வராக இருந்த மதன் லால் குரானா, 2001-ல் ராஜஸ்தான் ஆளுநராக பதவி வதித்தவர் ஆவார்.

அனந்த்குமார்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த அனந்த்குமார் நவம்பர் 12, 2018 அன்று மரணம் அடைந்தார். பெங்களூரு தெற்கு தொகுதியில் இருந்து பல முறை எம்.பி.-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாஜ்பாய் அமைச்சரவையிலும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிலும் மந்திரி பதவிகளை வகித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

கோவாவின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கர் மார்ச் 17, 2019 அன்று காலமானார். அவர் நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்தார். பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

சுஷ்மா ஸ்வராஜ்

பாஜக-வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகஸ்ட் 6, 2019 அன்று காலமானார். அவருக்கு வயது 67. மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ், உடல் நலன் காரணமாக கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. பின்னர் தனக்கு மாநிலங்களவையிலும் பதவி வேண்டாம் என கட்சி மேலிடத்தில் வேண்டுகோள் விடுத்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பில் திறம்பட செயலாற்றியதாக பிரதமர் மோடியால், நேரடியாக பலமுறை பாராட்டப்பட்டவர் இவர்.

அருண் ஜெட்லி

மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கி வந்த அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

Related posts