இலங்கையின் செயற்பாடுகள் உலகிற்கே முன்னுதாரணமாகும்

கொடிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இலங்கையால் முடிந்துள்ளமை உலகின் ஏனைய நாடுகளுக்கு சிறந்த படிப்பினையாகுமென இலங்கைக்கான முன்னாள் ஜப்பான் விசேட பிரதிநிதி யசுஷி அகாஷி தெரிவித்தார்.

அவர் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்.

நேற்று (19) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய விருது விழாவில் இலங்கைக்கும் பொதுவாக மனித குலத்திற்கும் ஆற்றிய உன்னத சேவையை பாராட்டும் முகமாக இலங்கையர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் ஸ்ரீ லங்கா ரத்ன விருது ஜப்பான் நாட்டவரான யசுஷி அகாஷிக்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக யசுஷி அகாஷி மேற்கொண்ட பெரும் முயற்சிகளுக்கு ஜனாதிபதி இதன்போது அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் உலக சமாதானத்தினை உறுதி செய்யும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான வலிமையும் தைரியமும் நீண்ட ஆயுளும் அவருக்கு கிடைக்க வேண்டுமென வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையிலான நட்புறவினை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய பணிகளையும் வெகுவாக பாராட்டினார்.

தமக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவத்திற்காக ஜனாதிபதிக்கும் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் நன்றி தெரிவித்த யசுஷி அகாஷி, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுவதுடன், பௌத்த தர்மம் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவினை உறுதிப்படுத்தும் விசேட அம்சமாகும் எனத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசெல வீரக்கோன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related posts