அமைச்சர் மங்கள தலைமையிலான விசேட குழு இன்று யாழ். விஜயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ளது.நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழு இன்று யாழ் செல்லவுள்ளது.

தொழில் முயற்சியாளர்கள் 10 இலட்சம் பேரை உருவாக்கும் நோக்கில்

நிதியமைச்சால் நடத்தப்பட்டு வரும் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி, கருத்திட்டத்தின் மூன்றாவது தேசிய நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இக்காண்காட்சி நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளதுடன் வடக்கில் பிரதான மாவட்டமான யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி செப்டெம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்த கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கான தெளிவுபடுத்தல், அனுபவப் பகிர்வு உள்ளிட்ட விழிப்புணர்வுகள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து தெரிவித்தார்.

எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி கடந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மொனராகலையில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 24 முதல் 27 வரை அநுராதபுரத்தில் இரண்டாவது கண்காட்சி நடத்தப்பட்டது. அதன்மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்கள் மக்கள் கருத்துகளை கவனத்தில் கொண்டு இம்முறை பிரமாண்டமான வகையில் யாழ்ப்பாணத்தில் இந்த கண்காட்சி நடத்தப் படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இக்கண்காட்சி தொடர்பாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். அதற்கிணங்க இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இதுதொடர்பான அரச வைபவத்தில் நிதியமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts