இசைந்து கொடுக்காததால் என் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன

இந்திய கவர்ச்சி நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர், மல்லிகா ஷெராவத். ஆடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத இந்த அழகியின் கவர்ச்சிக் காட்சிகளை இணைய தளங்களில் தேடி ரசிப்பவர்கள் பல லட்சம் பேர். சினிமா ரசிகர்களை தனது கவர்ச்சி நடிப்பிற்குள் மூழ்கவைத்துக் கொண்டிருக்கும் இவர், முதல்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் தோன்றவிருக்கிறார்.

‘கவர்ச்சியான நடிப்பில் மட்டுமல்ல, கருத்துகளிலும் அதிரடி காட்டுவேன்’ என்று கூறும், மல்லிகாவின் பேட்டி:

‘வெப் சீரிஸ்’சில் நடிக்க உங்களை அணுகியபோது என்ன நடந்தது?

அதற்காக என்னை தொடர்புகொண்டவர்கள், ‘நீங்கள் ஒரு பெண் சாத்தானாக நடிக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். உடனே நான் உற்சாகமாகிவிட்டேன். அது ஒரு வேடிக்கையான சாத்தான். அம்மாதிரியான வேடத்தில் நான் இதற்குமுன் நடித்ததில்லை. ஒரு குறும்புத்தனமான, இந்தச் சாத்தானை விரும்புவதா, வெறுப்பதா என்று ரசிகர்கள் யோசிக்கக்கூடிய நேரத்தில் அதில் நான் சுவாரசியமாக நடிக்கப்போகிறேன்.

இந்த வெப் சீரிஸ் மூலம் நீங்கள் சினிமாவில் இருந்து, டிஜிட்டல் தளத்தில் முதல்முறையாகப் பிரவேசிக்கிறீர்கள். அங்கே உங்களை ஈர்த்தது எது?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், டிஜிட்டல் ஊடகம்தான் தற்போது என்னை அதிகம் கவர்கிறது. நடிகர், நடிகைகள் அச்சமின்றி நடிக்க வேண்டும், எந்தக் கவலையுமின்றி தங்களை வெளிப்படுத்த வேண்டும். சினிமாவைப் பொறுத்தவரை, சென்சார் போர்டு போன்ற ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் டிஜிட்டல் உலகத்தில் நாம் விரும்பியவாறு நடிக்கலாம், பேசலாம். அதுவே இதை ஒரு சுதந்திர உலகம் ஆக்குகிறது. நிர்பயா பாலியல் வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘டெல்லி கிரைம்’ வெப் சீரிசை பார்த்தீர்கள் என்றால், அந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தைக் கூட சிறப்பான தொடராக்கி இருந்தார்கள். அத்தொடரில் நடிகர், நடிகைகள் அவ்வளவு நன்றாக உணர்வுகளை வெளிப் படுத்தி நடித்ததற்கு, டிஜிட்டல் தளத்தில் இருக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம்தான் காரணம்.

எத்தனை சினிமாக்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவிற்காகவும், வெப் சீரிஸ்களுக்காகவும் நிறைய பேர் கதை கொடுத்திருக்கிறார்கள். அவைகளை எல்லாம் படித்துக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் குத்தாட்டம் ஆடிய பல பாடல்கள் இன்றும் கலக்கிக்கொண்டிருக்கின்றன. அந்த மாதிரி பாடல்கள் இன்னும் பலவற்றில் ஆடியிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

ஒரு நடிகர் அல்லது நடிகை அவ்வப்போது தன்னைத் தானே ஆய்வு செய்துகொள்வது அவர்களது வளர்ச்சிக்கு மிக அவசியம். அதனால்தான் நான் சினிமா உலகில் இருந்து கொஞ்ச காலம் விடுப்பு எடுத்துக்கொண்டேன். நாம் நமக்கு வசதியான சூழலுக்கே பழக்கப்பட்டுப் போய்விடக் கூடாது. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் வெளிநாடு போனேன், நடிப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று எனது திறமையை மெருகேற்றிக் கொண்டேன். நான் தொடர்ந்து குத்தாட்டப் பாடல்களிலேயே ஆடிக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்குப் போரடித்துவிடும். தற்போது பல இளம் நடிகைகள் அந்த மாதிரி ஆடிக் கொண்டிருக் கிறார்கள், நன்றாகவும் ஆடுகிறார்கள். நான் இப்போது இருக்கும் நிலை எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது.

வெப் சீரிசை தொடர்ந்து, அடுத்து உங்களை தொலைக்காட்சித் தொடர் களிலும் எதிர்பார்க்கலாமா?

டி.வி.யில் நல்ல வாய்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். சேலையால் தலையில் முக்காடிட்டுக் கொண்டு ‘சதி சாவித்திரி’ மாதிரியான வேடத்தில் நான் தோன்றினால் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்! (சிரிக்கிறார்).

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு ஆளானது குறித்து வெளிப்படையாகப் பேசும் ‘மீ டூ’ இயக்கம் பற்றி உங்கள் கருத்து என்ன?

கதாநாயகர்களுடன் நெருங்கிப் பழக விரும்பாததாலேயே நான் நிறையப் படவாய்ப்புகளை இழந்திருக்கிறேன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எதிர்பார்த்தபடி இசைவாக நடந்துகொள்ளாததாலேயே நான் நிறையப் படங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறேன். ஆனால், ‘படுக்கைக்கு வா’ என்று யாரும் என்னை நேரடியாகக் கூப்பிட்டதில்லை. நான் ரொம்ப தைரியமான பெண். என்னை அதற்காக அழைக்க யாருக்கும் தைரியம் கிடையாது. ஆனால், ‘மீ டூ’ மாதிரியான இயக்கம் தேவைதான். சரியான திசை நோக்கிய, ஒரு சரியான நட வடிக்கை என்று அதைச் சொல்லலாம். இப்போதாவது இதைப் பற்றிப் பேச ஒரு வாசல் திறந் திருக்கிறதே! ஒரு பாதுகாப்பான பணிச்சூழல் என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் அடிப்படை உரிமை. ‘மீ டூ’வுடன் ஒரு பெரிய பொறுப்பும் வருகிறது. எல்லோருமே பொறுப்பாக நடந்துகொள்வது நல்லது.

நீங்கள் படங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங் களைப் பற்றிக் கூறுவீர்களா?

இல்லை… வேண்டாம். அதெல்லாம் முடிந்துபோன விஷயம்.

‘மீ டூ’ மாதிரியான இயக்கத்தால், திரையுலக மனோபாவம் மாறுமா, பெண்கள் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாவது நிற்குமா?

இதனால் பெண்களுக்கு ஆதரவான சூழல் உருவாகி யிருக்கிறது. பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். முன்பும் பாலியல் பாதிப்பு விஷயங்கள் நடந்தாலும் அவை தனித்தனியானவையாகக் கருதப்பட்டன. யாரும் அதைப் பற்றி பேசவோ, எழுதவோ செய்யவில்லை. தற்போது ஆதரவான நிலை ஏற்பட்டிருப்பதால், இதன் தீவிரம் அனைவருக்கும் புரிந்திருக்கிறது.

நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?

நான் தற்போது தனியாக இருக்கிறேன், சந்தோஷமாகவும் இருக்கிறேன்.

Related posts