‘தர்பார்’ ரஜினிகாந்த் தோற்றங்கள் வெளியானது

ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்பு காட்சிகளை யாரோ திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர்.

ரஜினிகாந்தும் யோகிபாபுவும் கிரிக்கெட் விளையாடும் படமும் நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சியும் வலைத்தளத்தில் வெளிவந்தன. இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் வடமாநில போலீஸ் சீருடையில் நடத்த புகைப்படமும் கசிந்தது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தர்பார் படத்தின் 2 புகைப்படங்களை படக்குழுவினர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். ஒரு புகைப்படத்தில் ரஜினி போலீஸ் உடையில் ஜர்க்கின் அணிந்துள்ளார். கையில் ஒரு கம்பும் வைத்து இருக்கிறார். இன்னொரு புகைப்படத்தில் காவல்துறை அலுவலகத்தின் பால்கனியில் நின்று சிரித்துக்கொண்டு இருக்கிறார். 2 படங்களிலும் இளைமை தோற்றத்தில் காணப்படுகிறார்.

இதுபோல் தர்பார் தலைப்பையும் வெளியிட்டுள்ளனர். அந்த தலைப்பின் பின்புறத்தில் கறுப்பு நிறமும் அதற்குள் சிவப்பு நிறமும் உள்ளன. தர்பார் எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. இந்த 2 படங்களையும் வைத்து ரசிகர்கள் போஸ்டரை உருவாக்கலாம் என்றும் அதில் சிறந்தது தேர்வு செய்யப்படும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்து உள்ளார்.

தர்பார் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Related posts