பயங்கரவாதம் இனி தலைதூக்காதிருக்க அடித்தளம்

பாராளுமன்ற தெரிவுக்குழு சட்டபூர்வமானதென்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தெரிவுக்குழு முன்பாக எதனையும் மறைக்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத செயற்பாடு இனிமேல் இடம்பெறாத வகையில் அடித்தளமிடுவதே எமது நோக்கமாகும்.

நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதை செய்ய வேண்டியுள்ளதாகவும் தவறினால் அது தேசத்துரோக செயற்பாடாகிவிடும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். பிரதமர் விடுத்துள்ள விசேட செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

எனக்கும் அமைச்சர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. பாராளுமன்றம் இந்த யோசனைகள் அடிப்படையற்றவை என்று தீர்மானித்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து மறுகணமே நான் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினேன்.

நாம் எடுத்த நடவடிக்கை காரணமாக 2 மாதமாகிய குறுகிய காலத்தில் இத்தாக்குதலில் தொடர்புபட்ட சகலரையும் சட்டத்தின் பிடிக்குள் சிக்க வைக்க முடிந்தது. இது குறித்து எமது பாதுகாப்பு தரப்புகளை பாராட்டுகின்றேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவும் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள், கட்டடங்கள் போன்றவற்றுக்கு மீளகட்டியெழுப்புவதற்கு எமது அமைச்சர்கள் பாடுபட்டு உழைத்தார்கள். இந்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெற்றிருப்பதை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனிடையே மற்றுமொரு கேள்வி எழும்பியது, சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவு தகவல்கள் உரிய முறையில் உரிய இடங்களுக்கு சரியாக தொடர்புபடுத்தப்படாமை, பாதுகாப்பு நிபுணத்துவக் குழுவின் கவனம் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

நாங்கள் முதலில் மேற்கொண்டது பயங்கரவாதிகளை தேடிக் கண்டுபிடித்ததாகும். அதில் எம்மால் வெற்றி கொள்ள முடிந்தது. அதன் பின்னர் புலனாய்வு தகவல்களை தொடர்புபடுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்து கண்டறிவதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. இந்த தெரிவுக்குழு தொடர்பாக சிலர் பல விதத்திலும் பேசுகிறார்கள். ஆனால் அது சட்டபூர்வமானதென நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. எங்களால் மறைப்பதற்கு எதுவுமில்லை,அதனால் தெரிவுக்குழுவில் ஆஜராக அச்சப்படமாட்டேன். தெரிவுக்குழு முன் சென்று நான் அறிந்தவற்றை எல்லாம் கூறுவேன். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் விவாதத்தின் போது மிக முக்கியமான பல தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத செயற்பாடுகள் இனி ஒருபோதும் இடம்பெறாத வகையில் அடித்தளமிடுவதே எமது நோக்கமாகும். நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக நாங்கள் அதை செய்ய வேண்டியுள்ளது. இல்லையேல் அது ஒரு தேசத் துரோக செயற்பாடாகும்.

எனவே தெரிவுக்குழு மூலம் நாம் உண்மைகளை கண்டறிவோம். அதேபோன்று நீதிமன்றத்தின் முன்பு இது தொடர்பாக வழக்கும் உள்ளது. அங்கும் உண்மை வெ ளிப்படும். இந்த உண்மைகளை நாம் வெளிக்கொணர்வது தனிநபர்களையோ அரசியல் கட்சிகளையோ இலக்கு வைத்தல்ல. உண்மைகளை அடையாளம் கண்டு குறைபாடுகள் இடம்பெற்றிருந்தால் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுப்பதே எமது நோக்கம்.

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அவசியமான புதிய சட்டங்கள் பலவற்றை நிறைவேற்றிக்கொள்ள நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். சர்வதேச புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பையும் நாம் பெறவுள்ளோம்.

இன்னொரு முக்கிய விடயத்தை உங்கள் பார்வைக்கு முன்வைக்க விரும்புகின்றேன். இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்கள் மூலம் நாட்டின் சகல நடவடிக்ைககளும் ஓரிடத்தில் முடங்கும் என சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் நாங்கள் அதற்கு இடமளிக்கவில்லை. எங்கள் அரசாங்கம் பொருளாதாரம், சமூக, அபிவிருத்தி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்து செல்கின்றது. சமுர்த்தியை பெற்றுக் கொடுத்துள்ளோம், காணிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம், தொழில்வாய்ப்புகள், வீட்டுவசதிகளையும் வழங்கியுள்ளோம், முடங்கிப் போன சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். அரசாங்கத்தின் முன்நோக்கிய பயணத்திற்கு எந்த தடையும் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கவில்லை.

இவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு ஒன்றாக நின்று நாட்டைப் பற்றி சிந்தித்ததனால்தான் முடிந்தது. வெற்றிகொள்வதற்கு மேலும் சவால்கள் எம் முன்னே உள்ளன. நாட்டுக்காக ஒன்றுபட்டு அனைத்தையும் பெற்றுக் கொள்ள நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

Related posts