இனவாதம், மதவாதத்தை இல்லாதொழிக்க வேலைத்திட்டம் அவசியம் !

நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள இனவாதம், மதவாதத்தை இல்லாதொழிக்க முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு பாரிய அழிவை நோக்கிச் செல்லும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கா தெரிவித்தார்.

இனவாதம், அடிப்படை வாதம் என்பவற்றிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தயாரித்துள்ள முன்யோசனைகள் கொண்ட தொகுப்பை மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரிடம் நேற்று முன்தினம் (02) கையளித்த அவர், மேலும் தெரிவித்ததாவது-,

இடதுசாரி முற்சிந்தனை கொண்ட ஜனநாயக மக்கள் மத்திய நிலையத்தினூடாக ஒரு அபேட்சகரை முன் வைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளோம்.

இனவாதம், அடிப்படை வாதம் என்பவற்றிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒரே தேசியம் என்ற அடிப்படையில் ஒரு சக்தியை முன்வைப்பதே எமது இலட்சியம்.

தனி மனித சிந்தனையால் நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது என்ற யதார்த்தத்தை 71 வருடங்களின் பின் உணர்ந்துள்ளோம்.

எனவே தற்போது நாட்டுக்குத் தேவையாக இருப்பது வேலைத் திட்டங்கள் அடங்கிய அரசியல் சக்தி ஒன்றாகும். மஹிந்த என்பவருக்குப் பதிலாக மகன், மனைவி, அண்ணன், தம்பி என எவர் வந்தாலும் நாட்டை கட்டி எழுப்ப முடியாது.

நாட்டுக்கான பொதுவான சட்ட திட்டம், கல்வி சீர்த்திருத்தம், உட்பட பல்வேறு விடயங்கள் தமது தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts