எம்.ஜி.ஆருடன் நடிக்காதது வருத்தம் – கமல்ஹாசன்

தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

“என் மீதான விமர்சனங்களில், எனக்கு பயன்படும் விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்வேன். விமர்சனத்துக்கு விமர்சனம் சொல்லும் பழக்கம் எனக்கில்லை. விமர்சிப்பதையே தொழிலாக வைத்திருப்பவர்கள் அந்நிலையில் இருந்து மீளமாட்டார்கள். எம்.ஜி.ஆருடன் ‘நாளை நமதே’ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அப்போது ஒரு மாதம் எனக்காக எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.

அந்த படத்தின் டைரக்டர் சேதுமாதவன் என்னிடம் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்கவேண்டிய கதாபாத்திரம் அது. யோசித்து பாருங்கள் என்றார். நாளை நமதே என்று அவருடன் பாட்டுப்பாடி ‘டான்ஸ்’ ஆடியிருந்தால் இன்று எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கும்? ‘நாளை நமதே’ அந்த மந்திரத்தை தான் நான் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். அதை இப்போது யோசித்து பார்த்தால் எவ்வளவு இழப்பு என்று தெரிகிறது.

கடுமையான தருணங்களில் எனக்கு தோள் கொடுத்தோர் ஏராளம். என் வாழ்க்கையில் ‘தோள் கண்டேன், தோளே கண்டேன்’. விஸ்வரூபம் பட பிரச்சினையின்போது தமிழக மக்கள் எனக்கு தோள் கொடுத்து நின்றதை மறக்கவே முடியாது. எனக்காக தான் வாழும் 200 சதுர அடி வீட்டை எழுதி தர ஒருவர் முன்வந்தார்.

இவர்களை போன்றவர்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று யோசித்து யோசித்துத்தான் எனது இன்றைய வாழ்க்கை நகருகிறது. என் எஞ்சிய வாழ்க்கை இனி மக்களுக்காக தான் என்று சொல்வது வெறும் சினிமா வசனம் அல்ல. கடனை அடைக்க முடியாமல் வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டு இருக்கிறேன் என்பது தான் அதன் அர்த்தம். இந்த கடனை அடைக்க முடியாது. இது செய்த கணக்கு அல்ல, தனி கணக்கு.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related posts