பிகில் படத்தின் 3வது போஸ்டர் வெளியீடு

அட்லி, விஜய் கூட்டணியில் ‘தெறி, மெர்சல்’ படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இதன்பின் வெளியான ‘சர்கார்’ படமும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன், வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். வெறித்தனம், மைக்கேல் உள்ளிட்ட சில பெயர்களும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் தலைப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

முந்தைய படங்களான தெறி, மெர்சல், சர்கார் பட தலைப்புகளும் அவருடைய பிறந்தநாளிலேயே வெளிவந்தன. அதுபோல், விஜய்யின் 63வது படத்தின் தலைப்பையும், அவருடைய பிறந்தநாளையொட்டி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இதையொட்டி நேற்று மாலை படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய்யின் 63வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘பிகில்’ என்றால் ‘விசில்’ என்றும் அர்த்தம் உண்டு.

இந்த படத்தில் அவர், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் விஜய் இருக்கிறார். இதன் மூலம் அவர் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கால்பந்தாட்ட வீரர் சீருடையில் மகன் விஜய் உள்ளார். தந்தை விஜய், வேட்டி, சட்டை அணிந்து நாற்காலி ஒன்றில் கம்பீரமாக உட்கார்ந்து இருக்கிறார்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் இரண்டாவது தோற்றமும் வெளியானது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். தற்போது இந்த இரண்டு தோற்றங்களையும் ரசிகர்கள் டிரண்ட் ஆக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், விஜய் நடிக்கும் பிகில் படத்தின் 3வது போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகம் ஏற்பட்டு உள்ளது. முதல் இரு தோற்றங்களை தொடர்ந்து 3வது தோற்றமும் டிரண்டாகி வருகிறது. இந்த தோற்றத்தில், கால்பந்து வீரர் அணியும் சிவப்பு நிற டி சர்ட் உடன் லுங்கி கட்டியபடி, கையில் இரும்பு சங்கிலி வைத்தபடி அவர் நிற்கிறார். சிலர் அவரை நோக்கி கைகளில் தடியுடன் ஓடி வருகின்றனர் என்பது போல் தோற்றம் வெளிவந்துள்ளது. போஸ்டரில் படத்தின் தலைப்பு பிகில் என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்று உள்ளது.

Related posts