உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 25

கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் தேவன்.

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ஆதியாகமம் 22:18.

இன்று இலங்கையில் நடைபெறும் போராட்டங்களும், அதனைத் தீர்க்க எடுக்க முயற்சிக்கும் வழிகளையும், அதனால் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளும் மக்களை அமைதி இழந்து வாழும் ஓர் அவலநிலைக்கு அழைத்துச் செல்வதை நாம் காணக் கூடியாதாக உள்ளது. இதற்குக் காரணம் கீழ்படிதலை விரும்பாத ஓர் வாழ்வின் செயலாகும். (சுயவிருப்பம் ஆலோசனையாக இருப்பதனால்)

தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் தேவகட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைப்புசித்து தேவனுடனான உறவை முறித்துக்கொண்டனர். அதனால் தேவன் தாம் உண்டாக்கிய மக்களை நினைத்து துக்கித்தார். ஆனால் தேவன் ஆபிரகாமைக் குறித்து மிகவும் சந்தோசமடைந்திருப்பார். அப்படி இல்லையென்றால் ஈசாக்கிடம் ஆபிரகாமின் கீழ்படிதலைக் குறித்து கூறியிருப்பாரா! இதனை நாம் ஆதி.26:4-5இல் காணலாம்.

ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனை களையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேசத்தையும், உறவுகளையும் விட்டுப் புறப்பட்டுவந்த ஆபிரகாம், தேவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரே மகனையும் தேவன் கேட்டவுடனே பலியாக கொடுத்துவிட கீழ்ப்படிந்தபோது தேவன் மெய்யாகவே மகிழ்ச்சியடைந்திருப்பார். இல்லை என்றால், அவ்வேளையில் முட்புதருக்குள் சிக்கிக் கொண்டபடி ஓர் ஆட்டுக்கடாவை ஆபிரகாமிற்கு காண்பித்து பலியிட கொடுத்திருக்க மாட்டார்.

தேவன் தமது சாயலாக தாம் படைத்த மக்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று. அதுதான் ”கீழ்ப்படிவு”. இதற்குள் யாவும் அடங்கிவிடுகிறது. ஆபிரகாம் தேவனுக்குள் கீழ்படிந்ததால் விசுவாசத்தகப்பன் என்று பெயர் பெற்றான். ஆதாம் ஏவாள் அதே கீழ்படிவைத் தேவனுக்குள் காட்டாதபடியால் பாவத்தின் பிறப்பிடம் என்று உலகம் பேசிக்கொள்ளக் காரணமானார்கள்.

தேவபிள்ளையே, உன்னை, ஊர் என்ற பட்டணத்தில் இருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்று ஆபிரகாமுக்கு சொன்ன தேவன், பாவம் என்ற பட்டணத்தில் இருந்து உன்னையும் என்னையும் இழுத்தெடுத்து பரலோகம் என்ற பட்டணத்திற்கு பாவமன்னிப்பு மூலம் இரட்சிப்பை, விடுதலையைத்தந்து, அழைத்துச் செல்ல காத்திருப்பதாக உனக்குச் சொல்லி உன்னை அழைக்கிறார்.

கோடை காலத்தில் முழைத்தெழும்பும் இளம்பயிர் நீரின்றி வாடிப்போவதையும், வாடிவதங்கிவிட்ட புற்களின் இடையே வெளியே எட்டிப்பார்க்கும் அடிப்புற்களையும் நீங்கள் பார்த்ததுண்டா? பனிகாலம் முடியும் போது அற்புதவிதமாக முழைத்தெழும்பும் அழகான சிறிய பூக்களைப்பூக்கும் செடிகளை, கொடிகளைப் பார்த்ததுண்டா?

இன்று நம் அநேகரின் வாழ்கை இப்படித்தான் உள்ளது. வாழ்க்கையின் கோரப்பிடியில்சிக்கி நடக்க முடியாமல் தத்தளிப்பதையும், துன்ப துயரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் வாடிப்போவதையும் காணக்கூடியதாக உள்ளது.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில், அதாவது இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது இப்படித்தான் இருந்தார்கள். அடிமைத்தனம் (பாவத்தின் கொடூர பிடியினால் ஏற்பட்ட) ஏற்படுத்திய வறட்சி, அவர்களுக்கு வாழ்வின் சகல நம்பிக்கையையும் அழித்துப்போட்டிருந்தது.

நாம் இலங்கையில் இருந்தபோது, வயதானவர்கள் இவ்வாறு கூறுவதை கேட்டிருப்பீர்கள். வெப்பமும் வியர்வையும் அதிகரிக்கும்போது இது மழைக்கு அறிகுறி என்று. இதே போன்று தேவனும் பனியையும், மழையையும் அனுப்பி வரட்சியை அவர்களிடம் இருந்து நீக்கினார்.

வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன் பமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும். பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். உபாகமம் 32:1-2.

அதேபோல அன்று மோசே மூலம் அந்த மழைத்துளி இறங்கியது. அப்பொழுது கர்த்தர், எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலை யாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன் என்றார். யாத்திராகமம் 3:7-8 ( 3ம் அதிகாரம் முழுவதையும் வாசிக்கவும்).

அன்று தேவனுடைய வார்த்தைகள் எப்படி இஸ்ரவேலருக்கு புத்துயிர் கொடுத்ததோ, அதேபோன்று இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு புத்துயிர் கொடுத்து வருவதை உலகம் பூராகக்காணக்கூடியதாக இருக்கின்றது.

அலைகள் பத்திரிகையூடாகவும் தேவனுடைய வார்த்தை உங்களுக்கு புத்துயிர் கொடுக்க, பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல உங்கள்மேல் இறங்குகிறது.

போராட்டமான சூழ்நிலைகளினால் வரண்டுபோய் பாலவனம்போல வறட்சியாக உள்ள வாழ்க்கையில் இருந்து, பூமியை செழிப்பானதாக்கும் பனித்துளியாகிய தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து, தேவனிடத்தில் இருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ள நாம் ஒன்று சேர்ந்து இந்த ஜெபத்தை அறிக்கையிடுவோம்.

அன்பின் பரலோக பிதாவே, உமக்கு கீழ்படிவதன் மூலம் வறட்சி நிறைந்த போராட்டமான வாழ்கையில் இருந்து ஆறுதலையும், செழிப்புடன்கூடிய பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளும் வழியை கண்டுகொள்ள உதவியதற்காக நன்றி அப்பா. உம்முடைய துணையுடன் உமக்கு கீழ்படிந்து நடந்து, நானும் எனது குடும்பமும் உமது நாமத்தினால் ஆறுதளையும், ஆசீர்வாதத்தையும் கண்டடைந்து பாதுகாப்புடன் உமக்குள் வாழ உதவிசெய்யும் படியாக இயேசுவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T.Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts