பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா.. முக்கிய இலங்கை செய்திகள் !

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமையின் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்பட்டன.

இந் நிலையில் பொலிஸ் மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் பதவி விலகுமாறு எழுந்த அழுத்தங்களினாலேயே பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

—————–

கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தி 360 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 சி.ஐ.டி. சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடந்த விதம், அதற்காக குண்டுதாரிகள் ஒன்றுசேர்ந்த விதம் அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தோர் என அனைவர் தொடர்பிலும் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அதன்படி அவர்களில் பலரைக் கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்கொலை குண்டுதாரிகள் மறைந்திருக்க பயன்படுத்திய 5 பாதுகாப்பு இல்லங்களையும் சி.ஐ.டி.யினர் கண்டுபிடித்துள்ளனர். பாணந்துறை – சரிக்காமுல்ல, தெஹிவளை, கொள்ளுபிட்டி, வத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில், முன்னெடுக்கப்பட்டுவரும் விஷேட நடவடிக்கைகளில் இதுவரை குன்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் 78 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனயவுப் பிரிவில் நான்கு பெண்கள் உள்ளிட்ட 33 பேரையும், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஒரு பெண் உள்ளிட்ட நால்வரையும் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

———

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக, பாதிமா லதீபா மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா, அப்துல் காதர் பாதிமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோரின் பெயர்களையே பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.

இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் 071 8591771, 011 2422176, 011 2395605 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும் அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

————-

அரசியல் கருத்துக்களையும் நோக்கங்களையும் புறம் தள்ளி பொதுமக்களுக்காக நாட்டில் சமாதானமான சூழலை கட்டமைப்பதற்கு ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சர்வகட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.

————–

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலில் சர்வ கட்சி மாநாடு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைவதின் முக்கியத்துவம் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது.

நாடு என்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தில் பயங்ரவாதத்தை வேரறுப்பதற்கும் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குதாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் உறுதியளித்தனர்.

இந்த பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டு மக்களின் நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காகவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில் கட்சி தலைவர்களுக்கு தெளிவூட்டிய ஜனாதிபதி, புதிய போக்குகளின் மத்தியில் பாதுகாப்பு பிரிவுகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று ஒன்றிணைந்த பாதுகாப்பு செயற்பாட்டு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் அதனூடாக அனைத்து பாதுகாப்பு செயற்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் கருத்துக்களையும் நோக்கங்களையும் புறம் தள்ளி பொதுமக்களுக்காக நாட்டில் சமாதானமான சூழலை கட்டமைப்பதற்கு ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த துரதிர்ஸ்டவசமான சம்பவம் தொடர்பிலும் பாதுகாப்பு துறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்ததுடன், அந்தக் குறைபாடுகளை திருத்திக்கொண்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.

Related posts