சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி

படி படி லேச்சே மனசு’ படம் தோல்வியடைந்தவுடன், சம்பள பாக்கி வேண்டாம் என்று கூறியதன் பின்னணியை குறித்து சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.

ஷர்வானந்த், சாய் பல்லவி நடிப்பில் பல கோடி ரூபாய் செலவில், கடந்த ஆண்டு இறுதியில் வெளியான தெலுங்குப் படம் ‘படி படி லேச்சே மனசு’. இப்படம் அங்கே பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள சாய் பல்லவி, “நான் அப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேசினேன். எனக்குத் தர வேண்டிய பணம் இப்போது உங்களிடமே இருக்கட்டும். உங்களுக்கு மீண்டும் பணம் கிடைத்த பிறகு எனக்குத் தரலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை என்றேன். அந்தப் பணம் என்னைவிட அவருக்குத் தான் இப்போதைக்கு தேவை என நினைத்துதான் அப்படிச் சொன்னேன்.

ஆனால் தயாரிப்பாளரோ,‘இல்லை, இதை எனது அடுத்த படத்துக்கான முன் தொகையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வருடத்துக்கு மேலாக எங்கள் படத்தில் பணிபுரிந்துள்ளீர்கள். எனவே எனக்கு குற்ற உணர்வாக உள்ளது. நான் இதை வைத்துக் கொண்டால் அது தவறு!’ என்றார்.

மேலும், ‘‘இந்நிலையில் பணம் பற்றிய இந்த உரையாடல் மீண்டும் மீண்டும் தொடரக்கூடாது என நான் கருதியதால், அதே தயாரிப்பாளர் நடிகர் ராணாவை வைத்து தயாரிக்கப் போகும் படத்தில் நான் நடிப்பதற்கான முன்தொகையாக அதைப் பெற்றுக்கொண்டேன். இந்தச் செய்தி எப்படி வெளியே வந்தது என்றும் தெரியவில்லை. இது வெளியில் தெரியும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை!” என்றார் சாய் பல்லவி.

Related posts