பாபநாசம் படத்தோடு ரிலீஸானதால் என் படம் நாசமாகிவிட்டது

‘பாபநாசம்’ படத்தோடு ரிலீஸானதால் என் படம் நாசமாகிவிட்டது என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

விவேக், சார்லி, பூஜா தேவரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் உருவாக்கியுள்ள இப்படம் வரும் 19-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விவேக், சார்லி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்தப் படம் குறித்து நடிகர் விவேக் பேசும்போது, ”எப்படி ‘உதிரிப்பூக்கள்’ படம் ஒரு ட்ரெண்ட்செட்டராக இருந்ததோ அதே போல ‘வெள்ளைப்பூக்கள்’ படமும் ஒரு ட்ரெண்ட்செட்டராக இருக்கும். இப்படத்தில் சார்லியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்லிக்குள் எப்போதும் ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகர் இருக்கிறார்.

பொதுவாக நான் காமெடியனாக நடிக்கும் படங்கள் ஹிட் ஆகிவிடும். ஆனால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடுகிறது. நான் நடித்ததிலேயே சிறந்த படமாக ‘நான்தான் பாலா’ படத்தைச் சொல்லலாம். ஆனால் அதனுடன் ரிலீஸான ‘பாபநாசம்’ படத்தால் இந்தப் படம் நாசமாகிவிட்டது. மொத்த தியேட்டர்களும் பாபநாசத்துக்கே கிடைத்ததால் இதைப் பார்க்கக் கூட ஆள் இல்லை. இதே போல் ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒன்று நடக்கும்.

இந்தப் படத்தின் ட்ரெய்லரை என்னுடைய நண்பர் என்ற முறையில் ஏ.ஆர். ரஹ்மானிடம் காட்டினேன். நன்றாக இருப்பதாகக் கூறினார். இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். படத்தை முடித்து என்னிடம் வாருங்கள் என்று கூறினார். ஆனால் அதன்பிறகு அவர் பிஸியாகி விட்டதால் இந்தப் படத்துக்கு அவரால் இசையமைக்க முடியவில்லை” என்றார் விவேக்.

Related posts