பாவம் விஜயகாந்திற்கு ஓய்வு கொடுங்கள்.. ஆனந்தராஜ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். எனவே இப்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் அவரது குடும்பத்தாரை கேட்டுக்கொள்கிறேன்’’ என்று நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.

நடிகர் ஆனந்த்ராஜ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

’’கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தனித்து நின்றார். வென்றார். ஆனால் இந்த முறை அதிமுகவுக்கு இருக்கிற வாக்குவங்கியை, பாஜகவுக்கும் பாமகவுக்கும் மற்ற கட்சிகளுக்கு இப்போது உள்ள அதிமுகவின் தலைமை, தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது. இது வேதனைக்குரிய ஒன்று.

கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா என்னை அழைத்து பிரச்சாரம் செய்யச் சொன்னார். 50 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தேன். ஆனால் இந்த முறை, அதிமுக தலைமை வேறுவிதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பிரதமர் மோடியிடமும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ராகுல்காந்தியிடமும் ஒரு உத்தரவாதத்தைக் கேட்டு, மக்களிடம் வழங்கவேண்டும். இந்த ஏழு பேரை விடுதலை செய்வீர்களா மாட்டீர்களா என்று இரண்டு தரப்பிலும் உறுதிமொழி கொடுக்கச் சொல்லவேண்டிய கடமை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நான் அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவருடைய உடல்நிலை தற்போது சரியில்லை. அவர் தன்னுடைய குடும்பத்துக்காகவும் இந்த சமூகத்துக்காகவும் நிறையவே உழைத்துவிட்டார். இனி அவரின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு குடும்பத்தார், விஜயகாந்துக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

விஜயகாந்தின் மனைவி நன்றாகப் பேசக்கூடியவர். அவர், கட்சித் தலைமையேற்று செயல்படட்டும். இனியும் விஜயகாந்தை வைத்து அரசியலாக்காமல், அவருக்கு ஓய்வு கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் திரையுலகின் மூத்த கலைஞர் கமல், புதுக்கட்சி தொடங்கியிருக்கிறார். தனிச்சின்னமும் பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதுவரை மாவட்ட அரசியல் தாண்டி பிரச்சாரத்துக்குச் சென்றதில்லை. இப்போதுதான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

இவ்வாறு ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.

Related posts