‘சூப்பர் டீலக்ஸ்’ என்னவோ தளர்ச்சி இருக்கிறது

சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பாராட்ட நிறைய இருந்தாலும், என்னவோ தளர்ச்சி இருக்கிறது என இயக்குநர் ராசி அழகப்பன் தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நேற்று (மார்ச் 29) வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. படத்தைக் கொண்டாடும் அதேசமயத்தில், சிலர் எதிர்மறை விமர்சனங்களையும் வைக்கின்றனர்.

‘வண்ணத்துப்பூச்சி’, ‘குகன்’ ஆகிய படங்களை இயக்கிய ராசி அழகப்பன், ‘சூப்பர் டீலக்ஸ்’ குறித்துத் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார்.

“ ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்தேன். முதலில் பாராட்டு. புதிய முயற்சிகளோடு, புதிய கண்ணோட்டத்தோடு எடுக்கப்படும் படத்திற்கு. ஆனால், அதுவே போதும் என்று நினைத்துவிட்டால், இல்லை என்றுதான் நான் சொல்வேன். எதார்த்தமாக இதுபோன்ற நிகழ்வுகள் வாழ்க்கையில் நடக்குமா? என்றால், பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இதுபோன்று சில நிகழ்வுகள் புனையப்பட்டு எடுப்பதன் மூலம், பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை இயக்குநர் பார்வையில் பார்வையாளர்களுக்கு கடத்த முடியும் என்பதும் உண்மை.

நான்கு விதமான கதைத் தளங்கள். 1.திருமணமான தம்பதிகளுக்கிடையில் ஒரு காதலனுடன் உடலுறவு வைத்துக்கொண்டு, இறந்தபின் நடக்கும் நிகழ்வுகள். 2.நான்கு விடலைப் பிள்ளைகளின் பிட்டு படம் பார்க்கும் அனுபவத்தால் கிடைக்கும் பிரச்சினைகள். 3.சுனாமியில் இருந்து தப்பித்த மிஷ்கின் குடும்பத்தின் கதை. 4.திருமணமாகி குழந்தை பெற்றபின் திருநங்கை ஆகிவிடுகிற ஒரு கணவனின் கதை.

இவை யாவும் குறுக்குவெட்டுக் காட்சிகளின் மூலம் கிடைக்கும் திரைக்கதை சுவாரசியமாகத்தான் நகர்கிறது. ஆனால், யாவும் முகம் சுளிக்க வைக்கிற சில காட்சிகளால் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. விஜய் சேதுபதி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் நடத்தைகளுக்கு உடன்படும் காட்சி. தன் காதலனை, தான் சேர்த்துக்கொண்ட விதம் மேட்டர் என்று சொல்லி அடிக்கடி சிரமப்படுத்தும் காட்சி. மிஷ்கினின் அளவு கடந்த நீளமான வசனம் உள்ள காட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக, சப் இன்ஸ்பெக்டராக நடிப்பவரின் அதீதமான நடிப்பு.

ஆனாலும், இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும். பாடல்கள், சண்டைக்காட்சி இல்லாமல் ஒரு புதிய முயற்சி. பின்னணி இசையில் யுவனின் யுத்தி. கலை இயக்குநரின் நேர்த்தியான அமைப்பு. ஒலி இயக்குநரின் சிறந்த கையாடல். ஒளியை உள்வாங்கிய கேமராமேனின் புதுவிதமான காட்சி அமைப்பு. பல சமயங்களில் இயக்குநரும் சமூகமும் விமர்சிக்கும் வசனங்களை எழுதி கைதட்டு வாங்கும் வசனகர்த்தா.

வெள்ளந்தியாக வலம்வரும் விஜய் சேதுபதியின் மகன். விஜய் சேதுபதியின் தைரியமான திருநங்கை நடிப்பு. சமந்தாவின் சங்கடம். பக்திப் பகடி ஆடும் மிஷ்கினின் நேர்த்தி. ஃபஹத் ஃபாசிலின் புலம்பல்கள். ரம்யா கிருஷ்ணனின் தவிப்பு என்று பாராட்ட நிறைய இருந்தாலும், என்னவோ ஒரு தளர்ச்சி இருக்கிறது.

இந்தத் தளர்ச்சியை நீக்கிவிட்டு இந்தப் படத்தைப் பார்க்க முடியும் என்றால், ஒரு புதிய முயற்சியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று கருதலாம். புதிய முயற்சியும், புதிய நுணுக்கமும், புதிய ஆற்றலும் சமூகத்துக்கு மேலும் வழிகாட்டுதலாக இருந்தால் நலம் என்று இயக்குநர் கருத வாய்ப்பு இருக்கிறது. காத்திருப்போம்… இன்னும் பல படைப்புகளை அவர் தருவார் என்று” என்று ராசி அழகப்பன் தெரிவித்துள்ளார்.

Related posts