நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் அடித்த சிறுவன்

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் சிறுவன் அடித்த சம்பவம் நடந்துள்ளது.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள்.

ஏராளமானவர்கள் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு குறித்து ஆஸ்திரேலிய வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேசர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசும்போது, முஸ்லிம்களை நியூஸிலாந்தில் அனுமதித்ததால்தான் கடுமையான சூழலைச் சந்தித்திருக்கிறது என்ற தொனியில் சர்ச்சையான கருத்தைப் பதிவு செய்தார்.

அவர் இந்தக் கருத்தைச் சொன்னதும் அருகில் இருந்த 17 வயது சிறுவன் கையிலிருந்த முட்டையால் அவர் தலையில் அடித்தார். இதனைச் சற்றும் எதிர்பாராத பிரேசர் சிறுவனைத் தாக்கினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரேசரின் கருத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related posts