விஷால் – அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம்

ஹைதராபாத்தில் நடிகர் விஷால் – அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

நடிகர் சங்கக் கட்டிடத்தில்தான் என் திருமணம் நடைபெறும் என்று விஷால் அறிவித்துள்ளார். மேலும், அக்கட்டிடம் முடிவு பெறும் நிலையில் இருப்பதால், மணப்பெண் யார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமிருந்தன.

ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று அனிஷா ரெட்டி என்ற நடிகை, விஷாலுடனான திருமணத்தை உறுதி செய்தார். இவர் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்யவிருப்பது உறுதியானது.

இன்று (மார்ச் 16) ஹைதராபாத்தில் விஷால் – அனிஷா இருவரது திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. ஆந்திராவில் பிரபலமான தொழிலதிபரின் மகள் அனிஷா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரது திருமணத் தேதி உள்ளிட்டவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஹைதராபாத்தில் நடைபெற்ற விஷாலின் திருமண நிச்சயதார்த்த விழாவில், தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் விஷால் – அனிஷா ரெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Related posts