இன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் : வைகோ

கல்லூரி மாணவரிடையே பேசிய வைகோ, காந்தி நினைவு நாளில் அவர் உருவபொம்மையை சுட்டு கொண்டாடியதை நினைவுகூர்ந்து கண்கலங்கினார். இன்னும் சில ஆண்டுகள் உயிர்வாழ்வேன் அது மக்களுக்காக பயன்படும் என பேசினார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இஸ்லாமும், தமிழும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில்நடந்தது.

நூற்றுக்கணக்கான மாணவ்ர்கள் முன் வைகோ காந்தி எனும் தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசும்போது அங்கிருந்த மாணவர்களை பார்த்து தம்பிகளே என்று அழைத்தார். பின்னர் திடீரென “உங்களை தம்பிகளே என்று கூப்பிடக்கூடாது, எனக்கு வயது அதிகம், எனக்கு நீங்கள் பிள்ளைகள், உங்கள் வயதில் எனக்கு பேரன் இருக்கிறான்” என்று கூறினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர் காந்தியின் நினைவு தினத்தன்று இந்து மகாசபா அமைப்பு தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்து, நாதுராம் கோட்சே வாழ்க என கோஷமிட்டு கொண்டாடியது குறித்து பேசினார்.

அப்போது வைகோ திடீரென கண்கலங்கினார், கண்களில் வழிந்த கண்ணீரை கர்சீப்பால் துடைத்துக்கொண்டே நான் இங்கு அரசியல் பேச வரவில்லை, எனக்கு அது தேவையும் இல்லை. இங்கு வந்துள்ள யார் கார்களிலும் மதிமுக கொடி இருக்காது, ஆனால் காந்தி உருவபொம்மையை எரித்து, சூட்டுக்கொண்டாடிய அந்தக்காட்சியைப் பார்க்கும்போது என் நெஞ்சே பதறியது என நா தழு தழுக்க பேசி கண்ணீர் விட்டார்.

தொடர்ந்து பேசிய வைகோ, “நான் ஓர் போராளி, எனக்கு தோல்வியே கிடையாது. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வருகிறேன்.

மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது. நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும்தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன், என்று பேசினார்.

Related posts