வாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 04 ( 28.01.2019 )

உன் சுயமரியாதையை இழந்துவிடாதே..!

உங்கள் சுயமரியாதையை உங்கள் நடத்தையால் நீங்களே குறைத்துக் கொள்ளலாம். அல்லாவிடில் இன்னொருவர் வேண்டுமென்றே குறைக்கும்போது, அதை அறியாமை காரணமாக நீங்களும் ஏற்றுக் கொள்ளும்போது இயல்பாகவே தோற்றுப் போய்விடுகிறீர்கள்.

எதிர்மறையாக எண்ணுதல், தன்னைத்தானே இயலாவாளி என்று தாழ்வாக மதிப்பிடுதல் போன்ற பழக்கங்களை நீங்கள் உங்கள் இளமைக்கால வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்ததா..?

சிலவேளை நீங்கள் தாக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு துயர் சுமந்த வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்கள் மிக அருமையாகவே பாராட்டப்பட்டிருக்கலாம். கீழ்மைப்படுத்த முயல்வோரால் நீங்கள் ஒரு முட்டாள் என்று கருதுமளவுக்கு வீழ்த்தப்பட்டிருக்கலாம்.

இத்தகைய பாதகமான சமுதாய போக்கினால் உங்கள் முதலிடம் பறிபட்;டுப்போயிருக்கலாம். அதுபோல உங்கள் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டும் போயிருக்கலாம். மற்றவர்களின் இகழ்ச்சிகளை கேட்டுக் கேட்டே அதுதான் நீங்கள் என்ற முடிவுக்கு நீங்களே வந்தும் இருக்கலாம். இந்த கடந்தகால எண்ணங்கள் உங்களை பெறுமதியற்ற ஒருவராக்கிவிடும் மறந்துவிடாதீர்கள்.

இவைகளை எண்ணி எண்ணியே நீங்கள் நாளாவட்டத்தில் ஒரு செயலிழந்த மனிதராக வந்திருக்கலாம். ஆகவே இவற்றில் இருந்து விடுபட வேண்டியது அவசியம். இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் சரிதானா என்று நீங்கள் சுயமாகவே சிந்திக்க வேண்டும்.

என்னால் ஒன்றுமே இயலாது. நான் ஒரு முட்டாள், எனக்கு போதிய தகுதி கிடையாது, நான் செயலூக்கமற்றவன் என்ற எண்ணங்கள் நச்சு செடிகள் போன்றவை. அவை வேகமாக வளர்ந்து ஒரு நச்சு வளையமாகச் சுழன்று உங்களை டிப்பிரசன் நிலைக்கு தள்ள முயன்றும் இருக்கலாம்.

இப்படி நடந்ததா என்று யோசித்துப் பாருங்கள்..

எப்போதுமே சிறியவராகட்டும் இல்லை பெரியவராகட்டும் குறைவாகவும், தாழ்ந்தவர்களாகவும் மதிக்கப்படும்போது பல்வேறு உளச்சிக்கல்களுக்குள் அவர்கள் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது. அத்தருணம் எங்களின் வாழ்வு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும். நாமும் நம்மை அறியாமலே நமது வாழ்வு மற்றவரால் தீர்மானிக்கப்படும் அவல நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுவோம்.

முதலில் நீங்கள் வெளியே உள்ள சூழலை அவதானிக்க வேண்டும் அதேபோல உங்களுக்கு உள்ளேயும் நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என்பதையும் கூர்ந்து அவதானிக்க வேண்டும் என்பது ஒரு பழைய வாசகம்.

எப்போதுமே எங்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தால்தான் நாம் மற்றவர்களின் இயலாமையை புரிந்துகொண்டு, அவர்களுடன் சேர்ந்தியங்க முடியும். அதற்கு நாம் நம்மை முதலில் மதிக்க வேண்டும். எம்மை தாழ்வுபடுத்தி நாமே கூறுவதை நிறுத்த வேண்டும்.

உயர்ந்த சுயமரியாதையை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டால் சமுதாயத்துடன் தொடர்புபட முடியும். அதனால் புதிய மனிதர்களுடன் உறவு கொள்ளவும் முடியும். மறந்துவிடாதீர்கள் சுயமரியாதை உள்ளவர்களாலேயே மற்றவருக்கு தலமைதாங்க முடியும்.

நாம் நமக்கான மரியாதையை கொடுத்துக் கொள்ள அடிக்கடி நம்மை பாராட்டிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எம்மால் காரியங்களை வெற்றிகரமாக ஆற்ற முடியும். எமது சுயமரியாதையை நாமே உயர்த்த வேண்டும், அதற்கு ஒரு போதும் தயங்கக் கூடாது. ( ஆத்மத்தால் ஆத்மத்தை உயர்த்த வேண்டும் – கீதை )

உனது சுயமரியாதை இதுவரை உயர்த்தப்படாவிட்டால் அப்பணியை உடனே தொடங்க வேண்டும். அதற்கு முதலில் உனது பழக்கவழக்கங்களை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்போதுமே உன்னைப்பற்றி நீ சிந்திப்பது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது, மற்றவர் உன்னைப்பற்றி சிந்திப்பதைவிட நீயே உன்னைப்பற்றி சிந்திப்பதே சிறந்தது.

நீ உன் வாழ்வை நம்பிக்கைக்குரிய ஒன்றாகக் காட்டும்போது அது உனக்கு உற்சாகத்தைத் தருவதோடு, உன்னோடு பழகுவோர்க்கும் ஓர் உற்சாகத்தைத் தரும். அத்தருணம் நீயே சுயமாக உணர்ந்து கொள்வாய் உன்னுள் மடைதிறந்த வெள்ளமாக உற்சாகம் பாய்வதை.

வாழ்வை நம்பிக்கைக்குரியதாய் மாற்றும்போது இழந்து போன உற்சாக வெள்ளம் எங்கோ தொலைவில் இருந்து உன்னைத்தேடி ஓடிவரக் காண்பாய். அதுமட்டுமல்ல நீ உற்சாகமாக நடக்கும்போது மற்றவர்களும் உன்னைப் பார்த்து உற்சாகம் கொள்ளக் காண்பாய்.

எப்போதுமே உன்னைச் சுற்றி நம்பிக்கை மிக்க மனிதர்கள் சூழ்ந்திருக்கும்படி வாழ்வை அமைத்துக் கொள்வாய். நீ சிறந்த வாழ்வு வாழ அது மிக அவசியமாகும்.

நம்பிக்கை தரும் வாசகங்களை உன் வீட்டு சுவரில் எழுதி ஒட்டிவிடு. அந்த நம்பிக்கை வாசகங்கள் உன்னை தோன்றாத் துணையாக வழி நடத்தக்காண்பாய்.

ஒரு நல்ல பயிற்சி என்னவென்றால் ஒரு நல்ல பழக்கத்தை வாழ்வின் அன்றாட பழக்கமாக்குவதுதான். உதாரணமாக ஒவ்வொரு நாள் மாலையிலும் ஒரு புத்தகத்தில் நன்றி கூறி எழுதுவதை பழக்கமாக கொள்ளுங்கள்.

ஒரு குறிப்புப்புத்தகத்தை உங்கள் படுக்கைக்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் பின்வரும் மூன்று விடயங்களை மறந்துவிடாமல் குறித்துக் கொள்ளுங்கள்.

01. கடந்து போகும் அன்றைய நாளுக்கு நன்றி கூறுங்கள்.
02. ஒரு நல்ல விடயத்தை எழுதிக்கொள்ளுங்கள்.
03. உங்களுக்கோ அல்லது உங்களுக்குதவிய இன்னொரு விடயத்திற்கோ பரிசளித்துக்கொள்ளுங்கள்.

கி.செ.துரை 28.01.2019
தொடரும்

Related posts