பன்கோவாவின் டாக்டர் பட்டம் பறிமுதல் நீதிமன்று உறுதி செய்தது

பன்கோவாவை வாசகர்கள் மறந்திருப்பார்கள்..

போலந்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் பெண்மணி டென்மார்க் பல்கலைக்கழக வீரர்களுக்கு காதில் இரண்டு பக்கங்களிலும் கொத்தாக பூவை சுற்றிய பல்கலைக்கழக விரிவுரையாளர்.

கேர்னிங் நகரில் முன்னர் மேயராக இருந்த கெல்கியா சனா பின்னர் அறிவியல் ஆய்வுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இவர் புகழ் பெற்றிருந்தார். அத்தருணம் பல குற்றச் செயல்களை இழைத்ததாக செய்திகள் வந்தன.

இவை பழைய கதைகள்..

மூலிகைப் பெற்றோல் ராமருக்கு மு.கருணாநிதியும், சந்திரபாபு நாயுடுவுமாகிய இரண்டு உலக அறிவு மிக்க முதல்வர்கள் பெற்றோலை கண்டு பிடித்தார் என்று பரிசு வழங்கியது போல இந்த பெண்மணியும் பெற்றோல் ராமர் பாணியில் பல விருதுகள் வென்று சாதித்துள்ளார் என்பது குற்றச்சாட்டு.

அதிலொன்றாக இவருடைய மூளை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் வெளி வந்தபோது அடடா பெரிய கெட்டிக்காரி என்று புகழாத வாய்கள் இருக்கவில்லை.

பின்னர்தான் தெரியவந்தது, அந்த கண்டுபிடிப்புக்களுக்கான ஆய்வுக்கட்டுரைகள் இவருடையது இல்லை என்று..

கோபம் வராதா என்ன..?

சிவபெருமானின் கவிதையோடு பாண்டிய மன்னனிடம் வந்த தருமி போல என்றால் இலகுவாக புரியலாமன்றோ..?

அது தலையில் இருக்கும் கூந்தலின் வாசப் பிரச்சனை இது தலைக்குள் இருக்கும் மூளையின் பிரச்சனை..

கோபம் கொண்ட கோப்பன்கேகன் பல்கலைக்கழகம் சும்மா இருக்குமா.. நக்கீரன் போல சீறி எழுந்தது.

பிழையான பாடலுக்கு பரிசளித்தால் அது தமிழ் சங்கத்திற்கு இழுக்கு என்று நக்கீரன் சொன்னது போல கோப்பன்கேகன் பல்கலைக்கழகமும் சொன்னது. இவருடைய டாக்டர் பட்டத்தை 2017 ம் ஆண்டே பறித்தெடுத்தது.. இப்போது கிழக்கு பிராந்திய நீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது.

இனி..

பன்கோவாவை சிவபெருமான் போல வந்து நெற்றிக்கண்ணை காட்டி யார் காப்பது, நமது பழைய கேர்னிங் நகர வென்ஸ்ர மேயர் கெல்கியா சனா வருவார் என்கிறீர்களா.. இல்லவே இல்லை ஐயா இப்போது பதவியில் இல்லை.

இந்த நிலையில்..

திடீரென வந்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் ஒரு கேள்வி கேட்டது..? கோவா என்றால் என்னவென்று..

சரியான பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும் என்றும் கூறியது.

கடுமையாக யோசித்த விக்கிரமாதித்தன் கோவாவும் வெங்காயமும் ஒன்று இரண்டையும் உரித்தால் கடைசியில் ஒன்றும் இல்லை என்று கூறினான்.

சரியான பதில் வேதாளம் பறந்து மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறியது.

அட பன்கோவாவின் ஆய்விலும் கோவா போல கடைசியில் ஒன்றுமில்லை என்று டாக்டர் பட்டத்தை பறித்துவிட்டார்கள் என்கிறீர்களா.. என்று கேட்கிறீர்களா..?

அட ரெம்ப கெட்டிக்காரர்களா இருக்கிறீர்களே என்று கூறவா முடியும்..?

அலைகள் 20.01.2019 ஞாயிறு

Related posts