சென்னையில் களைகட்டும் கலைத் தெருவிழா

வில்லுப்பாட்டு, கானா, ஒப்பாரி, நவீன நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ‘சென்னை கலைத் தெருவிழா’, சென்னையில் தொடங்கி நடந்துவருகிறது.

கலைகளின் மூலம் மனித மனங்களை சங்கமிக்கச் செய்யும் நிகழ்வாக, ஊரூர் ஆல்காட் குப்பம் விழா கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் இது சென்னை கலைத் தெரு விழாவாக பிப்ரவரி 10-ம் தேதி வரை வார இறுதி நாட்களில் கொண்டாடப்படுகிறது.

இந்த ‘சென்னை கலைத்தெருவிழா’ கொருக்குப்பேட்டை மார்க்கெட் பகுதியில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. வட சென்னையின் பல பகுதிகளில் ‘புகைப்பட நடைபயணம்’ நடத்தப்பட்டது. புகைப்படக் கலைஞர்கள் நடந்து சென்று பல்வேறு புகைப்படங்களை எடுத்தனர். பெசன்ட் நகரில் ‘கலைக்கூடம்’ குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் கடந்த 16-ம் தேதி நடந்தன.

மயிலாப்பூர் ராகசுதா அரங்கில், எண்ணூரைச் சேர்ந்த குழந்தைகளின் வில்லுப்பாட்டு, வியாசர்பாடி முனியம்மாளின் கானா பாட்டு, குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களை திருக்குமாரி அபூபக்கர் பாடும் நிகழ்ச்சி, நவீன நடனம் ஆகியவை இன்று மாலை 6.15 மணிக்கு நடக்கின்றன.

இதே அரங்கில், கொருக்குப்பேட்டை ‘அருணோதயா’ குழு இளைஞர்களின் கிராமிய நடனம், ஜே.பி.வீரமணியின் ஒப்பாரி நிகழ்ச்சி, வடசென்னையின் சாதனையாளர்களுடன் இயக்குநர் பா.இரஞ்சித் பங்குபெறும் உரையாடல், ஆங்கிலோ-இந்தியன் குழுவினரின் ‘ரியான் அண்ட் தி அண்டர்கவர்ஸ்’ மேற்கத்திய இசை நிகழ்ச்சி ஆகியவை நாளை (20-ம் தேதி) மாலை 6.15 மணிக்கு நடக்க இருக்கின்றன.

தொடர்ந்து ஜனவரி 27, பிப்ரவரி 1, 2, 10 ஆகிய நாட்களிலும் பல்வேறு இடங்களில் சென்னை கலைத் தெருவிழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கர்னாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

Related posts