வாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 02

குடும்பத்தின் மகிழ்வும் பிள்ளை வளர்ப்பும்

பிள்ளை வளர்ப்பு பயிர் வளர்ப்பது போல ஒரு விஞ்ஞான பூர்வமான செயல். அது இன்னொரு குடும்பத்தை பார்த்து காப்பி பண்ணுவதல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றியும், மகிழ்வும் சரியான பிள்ளை வளர்ப்பில்தான் தங்கியிருக்கிறது.

பிள்ளைகள் வளரவளர கூடவே அவர்கள் மீதான எதிர்பார்ப்புக்களும் வளர்ந்து செல்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்களும் சமுதாய அன்பும் அருவமான இரண்டு வேறுவேறான கயிறுகள் போல பின்னிக்கிடக்கின்றன. உதாரணமாக அதிக புள்ளிகளை எடுத்த பிள்ளை, பெற்றோருக்கு உதவும் பிள்ளை என்ற தலைப்புக்களில் பிள்ளைகள் போற்றப்படுவதை நாம் காண்கிறோம்.

நாமும் அந்ததைகய பிள்ளைகள் மீது ஏன் அன்பு வைக்கிறோம்.. ஏன்.. அதிலொரு பிள்ளை மற்றவருக்கு உதவும் பிள்ளையாக இருக்கிறது. இன்னொரு பிள்ளை படித்து நல்ல பெயர் எடுத்துக் கொடுக்கிறது. இதனால் அவர்கள் மீது மற்றவருக்கு அன்பு வருகிறது.

ஆகவேதான் பிள்ளைகள் வளரும் பருவத்தில் அவர்களுடைய இலக்குகளை அடைய வேண்டிய தேவைகளை நிரவல் செய்வதில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். அது நமக்குள் ஓர் இயற்கைத் தூண்டல் போல இருக்கவேண்டும்.

நமக்கு பசிக்கிறதா.. உடனே சமையல் செய்ய ஆரம்பிக்கிறோம். களைப்பாக இருக்கிறதா தூங்கப் போய்விடுகிறோம். நோய் வந்துவிட்டதா வைத்தியரிடம் போய் நிற்கிறோம். இதுபோலத்தான் பிள்ளைகள் வளரும் போது உருவாகும் தேவைகளையும் ஒரு தூண்டலாகக் கருதி பெற்றோர் அவற்றை தவறாது பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆனால் நாம் அப்படிச் செயகிறோமா.. இல்லை. நம்மில் பலர் அதை அடியோடு மறந்துவிடுகிறோம், பல தடவைகள் அறவே மறந்து போய்விடுகிறோம். இது பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் விடும் பெரிய தவறாகும்.

இந்த இடத்தில் பிறட்றிக் டக்ளஸ் என்ற சமூகவியலாளர் சொல்லும் கருத்தை நாம் ஒரு தடவை கேட்டுப் பார்க்க வேண்டும்.

வாழ்க்கை என்ற பள்ளியில் தவறாக வளர்க்கப்பட்டுவிட்ட ஒரு வளர்ந்த மனிதனை திருத்துவதைவிட, சிறு பிள்ளைகளை உறுதியுள்ள பிள்ளைகளாக வளர்ப்பது இலகுவானது என்கிறார். ஆகவேதான் திருத்த முடியாதவர்களை திருத்த நேரத்தை செலவிடுவதைவிட பிள்ளைகளை வளர்ப்பதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். இதை நமது அவ்வையார் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறிப்பிடுகிறார்.

பிள்ளைகளின் வளர்ச்சி நாம் நினைப்பது போல மெதுவானதல்ல..

நமது பிள்ளைகள் நாம் பார்த்துக் கொண்டிருக்க விரைவாக வளர்ந்து நம் கண் முன்னே ஆஜானுபாகுபோல நிற்பார்கள். சிலர் காதலியோடு வந்து நிற்பார்கள்.

சிறுவனாக இருந்தவன் இப்படி ஒரு குடும்பஸ்த்தனாக வந்துவிட்டானா என்பதை நம்புவது நமக்கு கடினம்தான், ஆனபடியால்தான் பிள்ளை வளர்ப்பு வேறு பிள்ளைகள் வளர்வது வேறு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது என்பது போல நமது வேலைப்பழு காரணமாக சிறிது தாமதிப்போம் என்று சாக்குப்போக்கு கூறக்கூடாது. நீங்கள் யார் உங்களுக்கு என்ன தேவை என்பதல்ல இங்கு முக்கியம். அவைகளைவிட உங்கள் பிள்ளைகள் முக்கியமானவர்கள்.

நீங்கள் ஒரு பிள்ளையை சரியாக வளர்த்திருந்தால் அதை இந்த உலகம் எடை போடும். அந்தப் பிள்ளை சொந்தக்காலில் நிற்க தகுதியுடையது என்று இந்தச் சமுதாயம் சொல்லும். பிள்ளை வளர்ப்பில் அந்த சமூகக்கருத்தை ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடன்.

இப்படியொரு பிள்ளையை பெற என்ன தவம் செய்தார்களோ என்று நாமல்ல மற்றவர்கள் சொல்லும்படியாக வளர்ப்பதே சரியான பிள்ளை வளர்ப்பு என்று வள்ளுவரும் இதையே கூறுவதை கவனிக்க வேண்டும்.

அப்படியாக நல்ல பயிர்கள் வளர வேண்டுமா..? அதற்கு நல்ல சூழல் வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து வரும் பருவத்தில் உங்கள் வீட்டுக்குள் பின்வரும் குரல்கள் நிறைந்து காணப்பட வேண்டும்.

01. நான் உன் மீது அன்புடன் இருக்கிறேன்.
02. நான் உன்னைப்பார்த்து பெருமைப்படுகிறேன்.
03. நீ சொல்லும் விடயத்தை நான் காது கொடுத்து கேட்கிறேன்.
04. இந்தக் காரியம் உன் பொறுப்புக்குரியது ஏனென்றால் நீ பொறுப்புள்ள பிள்ளை.
05. உன்னால் நிச்சயம் முடியும் யோசிக்காது அதைச் செய்.
06. கவலைப்படதே நான் உன் தவறுகளை மன்னிக்கிறேன்.
07. என்னை மன்னித்துவிடு..

போன்ற நேர்மறையான வசனங்கள் குடும்பத்தால் அடிக்கடி பயன்படுத்தப்பட வேண்டும்.

அவ்வளவு போதுமா இல்லை. அதை பிள்ளைகள் பழக வேண்டும். அன்பு என்றால் என்ன.. பொறுப்பேற்றல் என்றால் என்ன.. என்பதோடு மன மகிழ்வையும் அவர்கள் வீட்டிற்குள்ளேயே உணர வேண்டும். அவ்வாறு நடக்க வேண்டுமானால் பெற்றோர் அவர்களுக்கு முன்னுதாரணமாக, அவர்களுக்கான வாழ்க்கைப் பாடமாக தாமே வாழ்ந்து காட்டவேண்டும்.

பெற்றோர் சிலரின் கருத்துக்களால் பிள்ளைகள் வளர்வதை வெறுக்கிறார்கள்.

பிள்ளைகள் வேகமாக வளர்ந்து நம் கண்முன்னே நிற்பார்கள் என்று முன்னர் பார்த்தோம் ஆனால் அதற்கு மாறான ஒரு விடயத்தை இப்போது பார்க்கப் போகிறோம்.

பிள்ளைகள் உடலளவில் நன்கு வளர்ந்துவிட்டாலும், உண்மையில் வளர்ந்துவிட்டோம் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பெற்றோரும் பெரியோருமே.

வாழ்க்கை பாரத்தை சுமக்க முடியாத பெற்றோரில் பலர் பிள்ளையாய் இருந்துவிட்டால் தொல்லையே இல்லை என்கிறார்கள். குழந்தையை பெற்ற தாயொருத்தியோ இப்போது விட்டுவிட்டால் எப்போதும் தூக்கமில்லை என்று சிறு பெண் குழந்தைக்குகக் கூறுகிறாள்.

இவைகள் எல்லாம் என்ன செய்யும்..? பெரியவராக வருவதும், பொறுப்பேற்பதும் ஆபத்தான காரியங்கள் என்ற எண்ணத்தை சிறு பிள்ளைகளின் மனங்களில் விதைத்துவிடுகிறது. ஆகவேதான் உடல் வளர்ந்தாலும், அவர்கள் வளர மறுத்து வளர்ந்த குழந்தைகளாக வாழப்பார்க்கிறார்கள்.

இதில் சில உப விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன..

பெரியவர்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் வருகிறது. கணவன் மனைவிக்கிடையே வாழ்க்கையை நகர்த்த முடியாத கருத்து மோதல்கள் வெடிக்கிறது. பெரியவர்கள் வாழ்க்கையின் பல தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பற்றாக்குறையுள்ள மனிதர்களாக இருப்பதால் சலிப்படைந்து பிள்ளைகளாக வாழ்வது இலகு என்கிறார்கள். இந்த எண்ணம் பிள்ளைகளை வெகுவாகப் பாதிப்பது பலருக்கு தெரியாது.

எப்போதுமே பெற்றோர்கள், பெரியவர்களாக வாழ்வதில் உள்ள அற்புதங்களை பிள்ளைகளிடையே பேச வேண்டும். பெரியவர்களாக மாறினால் நீங்கள் சுயமாகவே முடிவுகளை எடுக்கலாம், சுதந்திரமாக வாழலாம் என்று உற்சாகம் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நொடியும் பெற்றோர் வெளிவிடும் வார்த்தைகளை ஒன்றுக்கு பல தடவைகள் பரிசோதனை செய்தே வெளிவிட வேண்டும். நாம் பிள்ளைகளிடையே நேர்மறையாகவா இல்லை எதிர்மறையாகவா பேசுகிறோம் என்று பேச முன் சிந்திக்க வேண்டும். இது நமது கடமை. பிள்ளைகள் பெரியவர்களாக வருவதற்கு ஆசை கொள்ள இது அவசியம்.

மேலும் பிள்ளைகளின் உணர்ச்சிகரமான விடயங்களில் நாம் நேர்மையற்று நடக்கக் கூடாது. பிள்ளைகளுக்கு முன்னால் நம்பிக்கையுடன் வாழ்ந்து காட்ட வேண்டும். எது நமக்கு மகிழ்வானது எது நமக்கு கடினமானது என்பதை பிள்ளைகளுக்கு நேர்மையாக எடுத்துரைக்க வேண்டும்.

நாம் பிள்ளைகளுக்கு எதையும் மறைக்க வேண்டிய தேவை இல்லை. அவர்கள் இளமை காரணமாக மிகமிக விரைவாக விளங்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நாம் உண்மைகளை மறைக்காமல் எடுத்துரைத்தால் நம்மை சுற்றி என்ன நடக்கிறதென அவர்கள் புரிந்துகொள்வார்கள். ஒருவிடயம் அவர்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பதைவிட தெரிந்திருப்பது நல்லது.

சில பெற்றோர் உணர்ச்சி வசப்பட்டு பிள்ளைகளுக்கு அடிக்கும்போது, வலிதரும் அந்த நிகழ்வை அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். அந்த நேரம் பெற்றோர் குருடாட்டமாக நடக்கிறார்கள் என்றே கருதுவார்கள். ஆகவேதான் பிள்ளைகள் விடயத்தில் மிகப்பெரிய பொறுப்பெடுத்து நாம் நடக்க வேண்டியிருக்கிறது.

ஒருபோதும் நமது எண்ணங்களாலோ செயல்களாலோ பிள்ளைகள் வாழ்வில் துன்பத்தை ஏற்படுத்தக் கூடாது. வாழ்க்கை என்பது மாறிக்கொண்டிருக்கும் ஒரு மாயாஜாலம் போல. மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் அது மாறிமாறி நகரும்.

அதுபோல வாழ்க்கையானது வலிகளையும் ஏற்படுத்தும், விபத்துக்களை ஏற்படுத்தும், விரக்தியை ஏற்படுத்தும், கண்ணீரையும் வரவழைக்கும். இதைப்புரிந்து, இன்ப துன்பம் இரண்டிலும் ஒரு சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த எதிரெதிர் பாரங்களுக்குள் இன்பமாக வாழ வேண்டுமானால் நாம் எதைத் தேட வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு பக்கங்களிலும் சமமான பாரத்தை ஒரு கம்பில் தொங்கவிட்டபடி கயிற்றில் நடக்கிறாள் ஒரு சிறுமி. அவளை பலர் வேடிக்கை பார்க்கிறார்கள். அவள் கீழே விழுந்துவிட்டால் என்னவாகும் என்று எண்ணியபடியே பலர் அங்கே குழுமியிருக்கிறார்கள். ஆனால் அவளோ பாரம் கூடி கறைந்தாலும், தன் கரங்களால் சமநிலையை உருவாக்கி, தன் இலக்கை நோக்கி முன்னேறுகிறாள் என்பதை பலர் பார்ப்பதில்லை. அவளைப்போலவே நாமும் இன்ப துன்பங்களை சமநிலைப்படுத்தி முன்னேற வேண்டும்.

அதேவேளை இன்பமும் துன்பமும் இயற்கை விதி போன்ற சமநிலை கொண்டவை. ஒரு பக்கம் மிகழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமானால் அதற்கேற்ப மறுபக்கம் துன்பமும் வரத்தான் செய்யும்.

மறந்துவிடக்கூடாது, பெற்றோர் என்பவர்கள் பிள்ளைகளின் ஆசிரியர்கள், ஆனால் அவர்களும் மனிதர்களே. அவர்களின் சொந்தப் பிரச்சனைகள், கஷ்டங்களை எல்லாம் சுமந்து போராடும் போராளிகளே அவர்கள்.

ஆகவே பெற்றோர் இடைக்கிடை தவறு விடலாம், அப்படி தவறினால் பிள்ளைகள் அவர்களை மன்னிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் உண்மையாகவே ஆரோக்கியமான ஆளுமை உள்ள மனிதர்களாக இருந்தால் பிள்ளைகளை தொல்லைப்படுத்த வேண்டிய தேவையில்லையல்லவா..?

இதற்கு ஓர் உதாரணம் கூறலாம்..

ஒன்று நீ உன் கடந்த காலத்தை கைவிட்டு நிகழ்காலத்திற்குள் பாய்ந்துவிடு..!
இல்லை கடந்த காலத்தில் இருந்து பாடத்தை கற்றுக்கொள்…!
ஆனால் ஒருபோதும் கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் விடாதே…!

கி.செ.துரை 13.01.2019
தொடரும்..
சுவாரஸ்யமான மூன்றாவது அத்தியாயம் அடுத்த வாரம் வருகிறது.

Related posts