போலி ஆவணம் : நாமலுக்கு எதிராக விசாரணை

போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தில் இணைந்தமை மற்றும்பயிற்சியின்போது தப்பிச்சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஊழல் தடுப்பு படையணி எனும் அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) அறிவித்துள்ளது.

இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் CID அதிகாரிகள் நீதிமன்றில் இதனை அறிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் நாமல் குமாரவினால் வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவட்டுகளையும் (CD) அவர்கள் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய குறித்த ஒலிப்பதிவுகள் தொடர்பில், குரல்களை அடையாளம் கண்டு அது தொடர்பான இரசாயன பகுப்பாய்வாளர்களின் அறிக்கையை பெறுவதற்கு நீதிமன்றம் CID யினருக்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, குறித்த வழக்கு தொடர்பில் கைதாகியுள்ள, தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா மற்றும் அவ்வழக்கின் மற்றொரு சந்தேகநபரான இந்திய பிரஜை ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts