மறக்க முடியாத தாயகத்தின் சுனாமி நினைவுகள் தாங்கிய தூபிகள் ( புகைப்படங்கள்)

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் இன்றும் அழிவுறாத நினைவேந்தல்களாக இருப்பது சுனாமி எனப்படும் ஆழிப் பேரலையின் அனர்த்தம்தான்.

இன்று டிசம்பர் 26 ம் திகதி செப்டெம்பர் 11 போல மக்கள் அழிக்கப்பட்ட ஒரு நாளாக அனுட்டிக்கப்படுகிறது. ஒன்று மனிதப்பயங்கரவாதம் மற்றையது ஆழிப்பேரலை பயங்கரவாதம்.

இலங்கையின் கிழக்கு மாகாணமே சுனாமியால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட இடமாகும். அங்குள்ள நினைவுத்தூபிகள் இருக்கும் இடங்களுக்கு சென்று அவற்றில் உள்ள பெயர் பட்டியல்களை பார்த்தாலே கலக்கம் ஏற்படுகிறது.

இன்றும் மக்கள் அந்த நாளை நினைத்து உறைந்து போயுள்ளார்கள். அக்கரைப்பற்றில் சுனாமி சாப்பிட்ட ஒரு விஷ்ணு ஆலயம் அழிந்திருக்கும் தோற்றம் இன்றும் கிலி ஏற்படுத்துகிறது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனைப்பகுதியில் இரண்டு பெரும் சுனாமி தூபிகள் காணப்படுகின்றன. சிவப்பு நிறத்தில் முஸ்லீம் மக்களுக்கும், நீல நிறத்தில் தமிழ் மக்களுக்குமாக அவை கட்டப்பட்டுள்ளன.

பெயர் பட்டியலை பார்த்தால் ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் கூட கொத்தாக இழுத்து செல்லப்பட்டிருப்பதை படிக்க முடிகிறது. இப்படி பத்துக்கும் மேற்பட்ட உறவுகளை இழந்த அவலம் பல இடங்களில் இன்றும் ஆறாத சோகமாக இருக்கிறது.

முல்லைத்தீவிலும் இதுபோல ஒரு தூபி அமைந்துள்ளது. அங்குள்ள பட்டியலும் மிகவும் பெரிதாக நீண்டு செல்கிறது.

இதே காலப்பகுதியில் சுனாமி உருவான இடத்திற்கு அண்மையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுனாமி ஏற்பட்டு 430 பேர்வரை இறந்துள்ளார்கள். அன்று முதல் இன்றுவரை அப்பகுதியில் ( கடலடியில் ) பாறைகளின் உடைவு ஒலி பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இலங்கையின் இட அமைவின் இருத்தலானது கடல்கோள் எதிர்வு பக்கமாகவே இருக்கிறது. கிழக்கு மாகாணத்தின் கடல் அலைகளை பார்த்தால் இன்றும் ஒரு சுனாமி வந்தால் மக்கள் தப்பியோட வாய்ப்புக்கள் இல்லை என்றே கூற வேண்டும்.

அம்பாந்தோட்டை பகுதியில் ரயில் வண்டி ஒன்றை சுனாமி பிய்த்தெறிந்திருப்பதை பார்த்தால் மனதில் பயப்பீதி வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவுக்குப் பின்னரும் உரிய பாதுகாப்புகள் இருக்கின்றனவா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

சுனாமி தூபிகளின் படங்களை தருகிறோம்.
புகைப்படங்கள் அலைகள் அனுஷ்க்
அலைகள் 26.12.2018

Related posts