அஜித் படத்தில் நடிகராக அறிமுகமாகும் ரங்கராஜ் பாண்டே

விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

அஜித்தின் 59-வது படமான இதன் படப்பிடிப்பு, நேற்று (டிசம்பர் 14) பூஜையுடன் தொடங்கியது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்தப் படத்தில் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடிப்பது உறுதியாகியுள்ளது. தந்தி தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், அடுத்த ஆண்டு (2019) மே மாதம் 1-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts