பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறார் ராஜபக்ஷ

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வார் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால தடையுத்தரவொன்றினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 03ஆம் தேதி இந்த இடைக்கால தரையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரம் இல்லை எனத் தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி இடைக்காலத் தடையினை விதித்தது.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையினை நீக்குமாறு, மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையினை, உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளார் என, அவரின் புதல்வர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, மகிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செய்ற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்க உச்ச நீதிமன்றம் ஏகமனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை வலுவற்றதாக்குமாறு உத்தரவொன்றினை பிறப்பிக்க கோரி, பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ எம்.பி. தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாகவும், அதில் தமது அதிகாரங்களை செலுத்த முடியதெனவும் நீதிமன்றம் அறிவித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் 121 பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் பிரதமரும், அமைச்சரவையும் அந்தப் பதவிகளை வகிப்பதை தடைசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றால் இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts