‘2.0’ திரைப்படம் 400 கோடியைத் தாண்டி வசூல்

உலக அளவில் ரூ.400 கோடியைத் தாண்டி வசூல் செய்து, தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்ததுள்ளது ‘2.0’ திரைப்படம்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தமிழை விட தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நல்ல வசூல் செய்து வருவதால் படக்குழுவினர் சந்தோஷமடைந்துள்ளனர்.

தற்போது முதல் வார வசூலில் ‘2.0’ திரைப்படம் ரூ.400 கோடியைக் கடந்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் கடும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம் என்னவென்றால் இதுவொரு சாதனையாகும். தனது ‘எந்திரன்’ படத்தின் சாதனையை, அதன் 2-ம் பாகமான ‘2.0’ கொண்டே முறியடித்திருக்கிறார் ரஜினி. உலக அளவில் தமிழ்ப் படங்களில் ரூ.289 கோடி ரூபாய் வசூல் செய்து முதல் இடத்தில் இருக்கிறது ‘எந்திரன்’. இச்சாதனையை ரூ.400 கோடியைத் தாண்டி வசூல் செய்து முறியடித்திருக்கிறது ‘2.0’. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து 3-ம் இடம் மற்றும் 4-ம் இடத்தில் ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ இருக்கிறது.

”முதல் இடம், இரண்டாவது இடம்லாம் பாப்பா விளையாட்டு. நம்ம எப்போதுமே சூப்பர் ஒன்” என்று ‘2.0’ படத்தில் ரஜினி பேசும் வசனத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Related posts