குஜராத்தில் பிரம்மாண்ட புத்தர் சிலை

குஜராத்தில் 182 அடி வல்லபாய் படேல் சிலையை அடுத்து, பிரம்மாண்ட புத்தர் சிலை அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். வதோதராவில் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை உலகிலேயே உயரமான சிலையாகும்.

அதேபோல குஜராத்தில் பிரம்மாண்ட புத்தர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சங்காகயா அறக்கட்டளை புத்தமத அமைப்பு, காந்தி நகரில் 80 அடி உயர புத்தர் சிலை அமைக்க குஜராத் அரசிடம் நிலம் கோரியுள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் பாந்தே பிரஷில் ரத்னா செய்தியாளர்களிடம் கூறும்போது, ”பெருமை வாய்ந்த குஜராத்தில் புத்தருக்கு சிலை அமைக்க உள்ளோம். படேல் சிலையை உருவாக்கிய ராம் சுதர் சிற்பியே புத்தர் சிலையையும் வடிவமைக்க உள்ளார்.

இதற்காக மாநில அரசிடம் நிலம் கோரியுள்ளோம். விரைவில் எங்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல குஜராத்தில் புத்தர் பல்கலைக்கழகம் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.

காந்தி நகரில் அரசு அளித்துள்ள இடத்தில் புத்தர் பல்கலைக்கழகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Related posts