பாராளுமன்றம் கூடியது – அமளி துமளி

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது.

இதனை அடுத்து ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுக்காக இன்று (16) வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பாராளுமன்றத்தில் ​நேற்று கூடிய போது அமைதியற்ற சூழ்நிலை தோன்றியதுடன் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

மேலும் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணடப்பட்டமையால் இன்று சபை அமர்வுக்காக வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

—————

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை மற்றும் இரத்தம் சிந்தும் நிகழ்வுகளுக்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர். பாராளுமன்றத்தையும் நாட்டையும் மேலும் குழப்பத்துக்கு உட்படுத்தாது தேர்தலுக்குச் சென்று மக்களே தீர்மானிப்பதற்கான வழியை ஏற்படுத்தவேண்டும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்ற குழுவறையில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான எஸ்.பி.திசாநாயக்க,சுசில் பிரேமஜயந்த,பந்துல குணவர்த்தன, தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில மற்றும் ஜயந்த சமரசிங்க ஆகியோர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தனர்.

இன்றும் (நேற்று) நேற்றும் (நேற்றுமுன்தினம்) சபாநாயகர் நிலையியற் கட்டளைகளையும், அரசியலமைப்பையும் மதிக்காது தன்னிச்சை யாகச் செயற்பட்டு வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் என்ற நிலைப்பாட் டிலிருந்துகொண்டு செயற்படுவது அவரின் நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுவதாகவும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

பிரதமரையும், அமைச்சரவையையும் ஏற்றுக் கொள்ளவில்லையென சபாநாயகர் கூறியுள்ளார். பிரதமரை நியமிப்பதோ அல்லது பிரதமர் மற்றும் அமைச்சரவையை அகற்றும் அதிகாரமோ சபாநாயகருக்கு இல்லை. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை சபாநாயகர் சபையில் அறிவிக்காது ஐ.தே.கவின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைய செயற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சபாநாயகரின் இவ்வாறான நடத்தையைப் பார்க்கும்போது அவர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஜனாதிபதியின் முடிவை சவாலுக்கு உட்படுத்த சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையைக் கருத்திற் கொண்டே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு சென்றார் ஜனாதிபதி.எனினும் தேர்தலை எதிர்கொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஜே.வி.பியினரும் உச்சநீதி மன்றம் சென்று அதைத் தடுத்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று (நேற்று) ஏற்பட்ட குழப்பம் மற்றும் இரத்தம் சிந்தும் நிலைக்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட இழுபறியில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலை சென்றுள்ளனர். எதிர்க்கட்சியில் இரு உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். இவற்றுக்கான பொறுப்பை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தன

தமது அரசியல் வரலாற்றில் இந்தளவுக்கு மோசமாக நடந்துகொண்ட சபாநாயகர் ஒருவரை தற்பொழுதே பார்த்திருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றஞ் சாட்டினார்.இரண்டு தினங்களும் அரசியலமைப்புக்கு முரணான வகையிலேயே சபாநாயகர் நடந்துகொண்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அப்போதிருந்த சபாநாயகர் எம்.எச்.மொஹமட் நடுநிலையாகச் செயற்பட்டார். ஆனால் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட பதவிக்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

குரலை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கை யில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார். மரண உதவி சங்கங்களின் தலைவரை நீக்குவதற்குக் கூட இப்படி குரலை அடிப்படையாகக் கொண்டு வாக்கெடுப்பு நடத்துவதில்லை. பிரதமரை நியமிப்பதற்கும் அமைச்சரவையை நியமிப்ப தற்கும் ஜனாதிபதிக்கே உரிமையுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், அவருக்கு ஆசனங்களை ஒதுக்கியிருந்தார். நேற்று (நேற்றுமுன்தினம்) பிரதமரை ஏற்றுக் கொண்ட அவர், இன்று (நேற்று) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை ஏற்றுக் கொள்ளவில்லையென அறிவிக்கிறார். நாளுக்கு நாள் நிலைப்பாட்டை மாற்றும் சபாநாயகரின் உளநிலை குறித்து சந்தேகம் உள்ளது என்றும் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

ஜயந்த சமரவீர எம்பி

தனது மேற்சட்டையில் இருந்த இரத்தக் கறையைக் காண்பித்து இங்கு கருத்துத் தெரிவித்த ஜயந்த சமரவீர எம்பி: பாராளுமன்றத்தில் இரத்தம் சிந்தும் நிலையை ஏற்படுத்தியது சபாநாயகரே எனக் குற்றஞ் சாட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித்த தெவரப்பெரும ஆகிய இருவரும் கத்திகளை சபைக்குள் எடுத்துவந்ததாகக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் தெரிவித்தார். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகளின் உயிர்களுக்கே அச்சுறுத்தல் காணப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் மக்களிடமிருந்தும் இரத்தம் சிந்தப்படுவதையா இவர்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

Related posts