எம்மை கோள் மூட்டி எவராலும் பிரிக்க முடியாது

மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணியை கோள் மூட்டியோ மூட்டிவிட்டோ பிரிக்க ஒரு போதும் இடமளிக்கப்​போவதில்லை எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரவித்தார்.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ் முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்தது போன்ற பாரதூரமான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றுகையிலே அவ் இவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட அவர்,

மூன்று மாதமும் 10 நாட்கள் நீடித்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசை தோற்கடித்து மீண்டும் ஒன்றிணைவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த வரலாற்று முக்கியம் வாய்ந்த முடிவை நாம் மதிக்கின்றோம்.

நாம் பிரிந்திருந்தோம். மக்களின் முடிவை ஏற்று ஜனாதிபதி நாட்டுக்காக இந்த பாரதூரமான முக்கிய முடிவை எடுத்தார். ஆனால், நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இவ்வாறான முடிவை எடுத்திருக்க மாட்டேன். வென்றாலும் தோற்றாலும் முடிவை மாற்றியிருக்க மாட்டேன்.

தற்காலிகமாகப் பிரிந்தவர்கள் இணைவது புதிய விடயமல்ல. நாட்டு நலனுக்காகவே நாம் இவ்வாறு இணைந்துள்ளோம். சொத்துக்களை யும் உரிமைகளையும் மட்டுமன்றி பிறக்க இருக்கும் குழந்தைகளின் உரிமையையும் பறித்தது மட்டுமன்றி நாட்டை வெளிநாடுகளுக்கு விற்கவும் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார். நியாயமற்ற ஆட்சியே நடந்தது. ஆனால், தற்பொழுது அந்த ஆபத்துகளில் இருந்து நாட்டை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாம் பிரதமராகப் பதவி ஏற்றதும் பொருட்களின் விலைகளைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினேன். அதன் பிரகாரம் பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. எம்மால் இதனைச் செய்ய முடியுமாக இருந்தால் ஏன் அன்று இதனைச் செய்ய முடியவில்லை? ஆனால், ரணில் மக்களைப் பாதிக்கும் விடயங்களே செய்தார். நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களும் ஐ.ம.சு.மு தலைவர்களும் ஜனாதிபதியும் பாரிய அர்ப்பணிப்புகள் செய்துள்ளனர்.இதனாலே மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மக்களுக்கு நல்லது செய்யவும் முடிந்துள்ளது. நான் கட்சித் தலைவராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயலாளராகவும் இருந்த போது கூட நான் குறைவாகவே பேசுவேன். அவர் தான் கூடுதலாகப் பேசுவார். அதனால் இங்கும் குறைவாகவே பேசுகிறேன்.

பிரிந்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டை ,கோள்மூட்டுவதன் மூலம் பிரிக்க இடமளிக்க மாட்டோம். இனி எம்மை மூட்டி விட முடியாது.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு சிறுபான்மை மக்களிடமும் சிறுபான்மை கட்சி தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

இங்கு தமிழிலும் உரையாற்றிய பிரதமர், தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் நாட்டை கட்டியெழுப்புவதற்கு உதவ முன்வர வேண்டும். நீங்கள் எப்பொழுதும் என்னை நம்பலாம். இனிமேல் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts