3 பிரிவுகளில் வழக்கு: நடிகர் அர்ஜூன் கைதாவாரா?

3 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதால், நடிகர் அர்ஜூன் கைதாவாரா என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் கன்னட படங்களில் நடித்துள்ள அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார். தமிழில் ‘நிபுணன்’ மற்றும் கன்னடத்தில் ‘விஸ்மய’ பெயர்களில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்ததாகவும் படப்பிடிப்பு ஒத்திகையில் தன்னை வேண்டுமென்று இறுக்கமாக கட்டிப்பிடித்ததாகவும் கூறினார்.

இதனை அர்ஜூன் மறுத்தார். பணம் பறிக்கும் நோக்கோடு இந்த புகாரை சொல்லி இருப்பதாக அர்ஜூன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா சாடினார். இந்த நிலையில் சுருதி ஹரிகரன் மீது ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கையும் அர்ஜூன் தொடர்ந்தார். இருவருக்கும் சமரசம் ஏற்படுத்த கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.

இந்தநிலையில் அர்ஜூன் மீது சுருதி ஹரிகரன் பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் 5 பக்க புகார் அளித்தார். அதில் அர்ஜூன் ஒத்திகை என்ற பெயரில் இறுக்கமாக கட்டிப்பிடித்தார் என்றும் படுக்கை காட்சியிலும் எல்லை மீறி நடந்தார் என்றும் கூறியுள்ளார். ஒரு நாள் ரிசார்ட்டுக்கு அழைத்தார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகார் அடிப்படையில் அர்ஜூன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அர்ஜூன் கைதாகலாம் என்று கன்னட பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது “அர்ஜூன் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தி விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Related posts